ஆசிரியர் தகுதித் தேர்வு நாளை தொடக்கம்; விதிகளை பின்பற்ற தேர்வு வாரியம் அறிவுறுத்தல்!
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், பதவி உயர்வுக்கும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என்று சமீபத்தில் வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published : November 14, 2025 at 8:03 PM IST
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு (2025) தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றிக்கான தேர்வு நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் மொதமத் 1,241 மையங்களில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரிவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் இதன்படி, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2025க்கான தாள் 1 தேர்வு (15.11.2025) நாளை மற்றும் தாள் II தேர்வு (16.11.2025 ) நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் ஒன்று தேர்வை தமிழ்நாடு முழுவதும் உள்ள 367 மையங்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 370 தேர்வர்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை 1,241 மையங்களில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 தேர்வர்களும் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் வெளியிடப்பட்டு, தேர்விற்கான மையங்களும் தயார் நிலையில் உள்ளன. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
மேலும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், அவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''2025 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்டது. இந்த தேர்வில் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதி தேர்வு தாள் ஒன்றிலும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு தாள் இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும். இவர்களுக்கான தேர்வு ஓஎம்ஆர் முறையில் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
| இதையும் படிங்க: ''தமிழக முதல்வரால் காவிரி நதிநீர் உரிமை பறிபோய் விடுமோ? என்ற ஐயம் எழுகிறது'' - பி.ஆர்.பாண்டியன் கவலை! |
தேர்வு நேரத்தில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுக்கான விதிகளை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும்'' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

