அரக்கோணம் அருகே ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து – ரயில்வே போலீசார் நேரில் ஆய்வு
இன்ஜின் எவ்வாறு தடம் புரண்டது? தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா? அல்லது தண்டவாளத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்ததா? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Published : August 29, 2026 at 10:23 PM IST
ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே ரயில் இன்ஜின் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் பகுதியில் கார்கள் ஏற்றுமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அப்பகுதியில் மூன்று லூப் லைன்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கார்கள் ஏற்றுமதி செய்யும் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த ரயில் இன்ஜின் ஒன்று லூப் லைனில் இருந்து வெளியே வரும் போது, எதிர்பாராத விதமாக திடீரென தடம் புரண்டது.
முக்கியமாக ரயில் இன்ஜினின் முன்பகுதியில் இருந்த மூன்று சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் உயிரிழப்பு பாதிப்புகள் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே துறை அதிகாரிகள், அந்த பகுதியில் தீவிரமான ஆய்வு பணியை மேற்கொண்டனர். மேலும், ரயில்வே காவல்துறை அதிகாரிகள் (GRP), ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) உள்ளிட்டோரும் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்ஜின் எவ்வாறு தடம் புரண்டது? தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா? அல்லது தண்டவாளத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்துக்கான முழுமையான காரணம் விசாரணை முடிவடைந்த பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த விபத்து லூப் லைனில் நடைபெற்றுள்ளதால், அரக்கோணம்–காட்பாடி பிரதான ரயில் மார்க்கத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தடம் புரண்ட ரயில் இன்ஜினை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

