ETV Bharat / state

அரக்கோணம் அருகே சோகம்: 2 மகன்களுடன் தாய் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு

3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரக்கோணம் ரயில் நிலையம்
அரக்கோணம் ரயில் நிலையம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 30, 2026 at 5:02 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே தாய் ஒருவர் தனது இரு மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோட்டையா (வயது 30). அம்மிக்கல் செய்யும் தொழிலாளியான இவர், உடல்நலக்குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி வள்ளி (வயது 23). இந்த தம்பதிக்கு பரத் (வயது 7), சந்தோஷ் (வயது 3) என இரு மகன்கள் இருந்தனர்.

இந்நிலையில், கணவர் உயிரிழந்த பின்னர், வள்ளி தனது இரு குழந்தைகளுடன் மங்கம்மாபேட்டை பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 30) காலை சுமார் 9 மணியளவில் அரக்கோணம் – திருத்தணி ரயில் மார்க்கத்தில் உள்ள மங்கம்மாபேட்டை பகுதியில், அரக்கோணத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற மின்சார ரயில் முன்பு வள்ளி தனது இரு மகன்களுடன் பாய்ந்ததாக கூறப்படுகிறது.
எதிர்பாராத இந்த சம்பவத்தில் வள்ளி மற்றும் அவரது இரு மகன்களான பரத், சந்தோஷ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விற்ற தாய், தந்தை உட்பட 4 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வள்ளி குடும்ப வறுமை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்தாரா? அல்லது உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணங்கள் இருந்ததா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவரை இழந்த நிலையில், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த தாய் தனது மகன்களுடன் ரயில் முன்பு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் மங்கம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.