ETV Bharat / state

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்பிக்க இன்றே கடைசி நாள்

வரைவு பட்டியலானது டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும். பெயர் இடம்பெறாதவர்கள் அன்று முதல் ஜனவரி 15 வரை தங்கள் பெயரை சேர்க்கலாம். இறுதி பட்டியலானது பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும்.

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 11, 2025 at 8:22 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் இன்றுடன் (டிசம்பர் 11) நிறைவடைகின்றன.

முன்பு டிசம்பர் 4ஆம் தேதியுடன் இந்த பணிகள் நிறைவடையும் என்று அறிவித்திருந்த நிலையில், இந்த கால அவகாசத்தை ஒரு வாரம் நீட்டிப்பதாக தேர்தல் ஆணையம் நவம்பர் 30ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, எஸ்.ஐ.ஆர் திருத்த பணிகளுக்கான வாக்காளர் படிவங்களை சமர்பிக்க இன்று கடைசிநாள். எனவே இதுவரை படிவங்களை சமர்ப்பிக்காதவர்கள் உடனடியாக வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ அல்லது உதவி மையத்திலோ சமர்ப்பிக்க தேர்தல ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் என்று சொல்லப்படுகிற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2002ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

ஒரே மாதத்தில் இந்த பணிகளை முடிக்கவேண்டும் என்ற நோக்கில் 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்கள் களத்தில் பணியாற்றினர். மேலும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 2,44,685 வாக்குச்சாவடி நிலை முகவர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்களை நிரப்பி, அதனை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ அல்லது உதவி மையத்திலோ சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணிகள் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதிவரை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என்றும், அதில் பெயர் இடம்பெறாதவர்கள் டிசம்பர் 9லிருந்து ஜனவரி 8ஆம் தேதிவரை தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க: தமிழ்நாடு பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவு

இதன் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், படிவங்களை சமர்ப்பிக்கும் பணிக்கான கால அவகாசத்தை டிசம்பர் 11ஆம் தேதிவரை நீட்டித்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இன்றுடன் அந்த பணிகள் நிறைவடையும் நிலையில் வரைவு பட்டியலானது டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும். பெயர் இடம்பெறாதவர்கள் டிசம்பர் 16 முதல் ஜனவரி 15 வரை தங்கள் பெயரை சேர்க்கலாம். இறுதி பட்டியலானது பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும்.

டிசம்பர் 10ஆம் தேதிவரை 99.99 சதவீதம் வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு விட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ள நிலையில், நேற்று வரை 6 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரத்து 380 பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் 4,207 வாக்காளர்கள் மட்டுமே படிவங்களை இன்னும் தரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.