11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published : May 27, 2026 at 4:34 PM IST
சென்னை: நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகம்படியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் பகுதியில் 81.0 மில்லிமீட்டர் மலை பதிவாகியுள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரை குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை. இருப்பினும், வேலூரில் 41.5°செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக உதகமண்டலத்தில் 13.2° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வடக்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மத்தியகிழக்கு - தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களின் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மே 28-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மே 29-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மே 30-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 31-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலையில் மாற்றமில்லை
வெப்பநிலையை பொறுத்தவரை 4 நாட்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவாகவும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை, இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும், வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

