திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து; போக்குவரத்துத் துறை அதிரடி
சென்னை மாநகராட்சி சார்பில் அடையாறு, பெசன்ட் நகர், பெரியமேடு, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதைகள் அமைப்பதற்காக விடப்பட்ட ரூ.284 கோடி மதிப்பிலான 35 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன.

Published : July 7, 2026 at 6:43 PM IST
சென்னை: முந்தைய திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டிருந்த, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தொடர்பான ஐந்து டெண்டர்கள் ரத்து செய்யப்படுவதாக தவெக அரசு அறிவித்துள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், அந்தந்த துறை அமைச்சர்கள் தங்களது துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அத்துடன் முந்தைய ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களையும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட சில டெண்டர்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. முன்னதாக, சென்னை மாநகராட்சி சார்பில் அடையாறு, பெசன்ட் நகர், பெரியமேடு, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதைகள் அமைப்பதற்காக விடப்பட்ட ரூ.284 கோடி மதிப்பிலான 35 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல், தமிழகத்திற்கு 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக வெளியிடப்பட்ட டெண்டரையும் தவெக அரசு ரத்து செய்தது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் கரூருக்கு சென்றால் திமுகவினருக்கு ஏன் இவ்வளவு பயம்? அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி
அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழக போக்குவரத்துக் கழகத்திற்காக வெளியிடப்பட்டிருந்த மேலும் 5 டெண்டர்களை போக்குவரத்துத் துறை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக போக்குவரத்துக் கழகத்திற்கு 60 ஆயிரம் டயர்கள் வாங்குவதற்கான டெண்டர், மினி பேருந்துகளுக்கான அடிச்சட்டம் வாங்குவதற்கான டெண்டர், அனைத்து அரசு பேருந்துகளிலும் வாகன இருப்பிடத்தை அறியும் விஎல்டிடி (VLTD) கருவி மற்றும் அவசரகால பட்டன்களை பொருத்துவதற்கான டெண்டர், மினி பேருந்துகளுக்கு கூடு கட்டுவதற்கான டெண்டர் உள்ளிட்ட 5 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பான உத்தரவை போக்குவரத்துத் துறை பிறப்பித்துள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட டெண்டர்களை தற்போதைய அரசு தொடர்ந்து மறுஆய்வு செய்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. போக்குவரத்துத் துறையில் 5 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் மீண்டும் புதிய டெண்டர்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

