விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு; நெல்லையில் இருந்து சென்னைக்கு படையெடுத்த பயணிகள்
நெல்லை உள்பட தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இன்று ஒரே நாளில் சென்னைக்கு படையெடுத்தனர்.

Published : January 4, 2026 at 10:33 PM IST
திருநெல்வேலி: அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை (ஜன.5) பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஒரே நாளில் சென்னைக்கு படையெடுத்த மக்களால் நெல்லை ரயில்களில் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டிருந்தது. இது தவிர கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையும் வந்ததால் சென்னை, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தனர். குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி போன்ற தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் பணி நிமித்தமாக வசிக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த நிலையில், இன்றுடன் பள்ளிகளுக்கு விடுமுறை முடிவடைந்தது நாளை பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், நெல்லை உள்பட தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இன்று ஒரே நாளில் சென்னைக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக பேருந்து மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக முன்பதிவில்லாமல் நாகர்கோவில் டூ சென்னைக்கு நாள்தோறும் இயக்கப்படும் அந்தியோதயா ரயிலில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தினமும் மாலை 5.10 மணிக்கு இந்த ரயில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வந்து செல்லும். இன்று நெல்லை வந்த அந்தியோதயா ரயிலில் மக்கள் முண்டியடித்தபடி ஏறினர். ஆனாலும் பலருக்கு இருக்கைகள் கிடைக்காததால் மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிரமத்தோடு நின்றபடியே பயணித்தனர். இதனால் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் இன்று பரபரப்புடன் காணப்பட்டது.

