ETV Bharat / state

நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக மேல்முறையீடு - அமைச்சர் திட்டவட்டம்

தமிழ்நாட்டில் 4 தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறி உள்ளதால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும்போது அரசு கூடுதல் மருத்துவ இடங்களை உருவாக்க வேண்டிய சூழல் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு
அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 8, 2026 at 9:54 PM IST

4 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாட்டில் இயங்கி வரும் 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றுள்ளது குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனவும், மேலும் நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்து பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ள 2 மருத்துவக் கல்லூரிக்கு தடையின்மை சான்றிதழ் வழங்கப்படாது எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பொதுமக்கள் வீட்டில் இருந்தே புறநோயாளிகள் சேவைக்கான முன்பதிவை பெறும் வகையில் "நலம் AI" என்ற Whatsapp Chatbot சேவையை அமைச்சர் அருண்ராஜ் இன்று தொடங்கி வைத்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் நுரையீரல் பிரிவிற்கு மட்டும் பரிசோதனை முறையில் மருத்துவரை சந்திப்பதற்கான நேரத்தையும் குறிப்பிட்டு பெறும் வசதியையும் அவர் துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், "தனியார் பங்களிப்புடன் பல மருத்துவ உபகரணங்கள் இன்று ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மற்ற தனியார் நிறுவனங்களும் அரசு மருத்துவமனைகளும் இதுபோல மருத்துவ உபகரணங்களை கொடுத்தால் நன்றாக இருக்கும்.

E - ICU எனும் 18 படுக்கைகள் உடன் ஒரு வார்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆதார் OTP பிரச்சனையால் மருத்துவமனைகளில் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதாக தெரிவித்தனர்.
இதனை கருத்தில் கொண்டு புறநோயாளிகள் வீட்டில் இருந்தப்படியே (Appointment ) மருத்துவரை சந்திப்பதற்கான நேரத்தை வாட்ஸ் அப் மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் பேசிய அவர், "தமிழ்நாட்டில் 4 தனியார் மருத்துவமனைகள் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆக மாறி உள்ளதால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும்போது அரசு கூடுதல் மருத்துவ இடங்களை உருவாக்க வேண்டிய சூழல் உள்ளது.

ஒரு மருத்துவ கல்லூரி பெயர் சொல்ல விரும்பவில்லை; அந்த கல்லூரி 2023 ஆம் ஆண்டு முதல் Apply செய்து உள்ளனர். ஆனால் NOC வழங்கப்படாமல் இருந்தது. பின்னர் கொடுக்கப்பட்டு அதுவும் பிறகு திரும்ப பெறபட்டது.
அதற்கான காரணம் தெரியவில்லை.

தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றதால் இடஒதுக்கீடு முறை, 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை என எதையும் அவை பின்பற்றவில்லை. அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தையும் அவை பின்பற்றவில்லை என்று கூறிய அமைச்சர், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதுதான் இதற்கெல்லாம் தீர்வாக இருக்கும்." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இதில் சம்பந்தப்பட்ட நான்கு மருத்துவ கல்லூரிகள் எந்த அரசியல் கட்சிகளுடன் தொடர்பு உடையது என உங்கள் அனைவருக்கும் தெரியும். முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நடத்தும் கல்லூரிகள் மாநில இட ஒதுக்கீட்டிற்குள் வர வேண்டாம், 7.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க வேண்டாம் என விண்ணப்பிப்பது எந்த விதத்தில் தமிழக மக்களுக்கு செய்யும் நியாயமாக இருக்க முடியும்? என்று திமுக, அதிமுக கட்சி தலைமைகளை பார்த்து கேட்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: தான் பிறந்த எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு; குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்

நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு தடையின்மை சான்றிதழ் வழங்கிய விவகாரம் தொடர்பான கேள்விக்கு, "தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி , சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அங்கீகாரம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்கள். இரண்டு மருத்துவ கல்லூரிகளின் முதலாளி யார் என அனைவருக்கும் தெரியும், திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் தான் இவை இரண்டும்" என்று அமைச்சர் கூறினார்.

அத்துடன், "இந்தக் கல்லூரிகள் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் வருவதால், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தடையின்மை சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பம் (NOC) செய்யவில்லை. அவர்களின் தடையின்மை சான்றிதழ் இல்லாமல் பல்கலைக் கழக மானியக்குழுவிற்கு (UGC) க்கு நேரடியாக விண்ணப்பம் செய்து உள்ளனர்.

இதேபோன்று ஓசூரில் உள்ள St peters மருத்துவ கல்லூரிக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் தடையின்மை சான்றிதழ் கொடுக்கவில்லை. பல்கலைக் கழக மானியக்குழுவிற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். 60 நாட்கள் கடந்தும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததால், டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு சென்று அனுமதியை பெற்றுள்ளனர்.

இதனை எதிர்த்து தமிழக அரசு மேலமுறையீடு செய்துள்ளது. ஆனால் அந்தக் கல்லூரிக்கும் நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கான அங்கீகாரம் கொடுத்துள்ளனர். மேலும், கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியும் கடந்த 2023 இல் நிகர்நிலை பல்கலைக்கழக அங்கீகார்ம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த நான்கு மருத்துவ கல்லூரிகளை போலவே இன்னும் இரண்டு மருத்துவ கல்லூரிகள் உள்ளன" என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், "20.5.2026 தேதியிட்ட நோட்டிபிகேஷன் ( Notification)படி தான் இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதனால் இதற்கு இடைக்கால தடை உத்தரவு வாங்கவில்லை என்றால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடிய சூழல் இருக்கிறது என்பதுதான் உண்மை. .தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமனம் செய்யாமல் இருக்கிறார்கள். அந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது " எனவும் அமைச்சர் கூறினார்.

மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் தேர்வு எழுதிய 751 மருத்துவர்களுக்கு விரைவில் அரசு சார்பில் பணி நியமன ஆணைகள் வழங்க உள்ளோம். சுகாதார ஆய்வாளர்கள் தேர்வு எழுதியும் தங்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை என போராட்டம் நடத்தினர். நீதிமன்ற உத்தரவுபடி 1,353 பேர் சுகாதாரத் துறை ஆய்வாளர்களாக நியமிக்கப்ட உள்ளனர் என்றும் அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் "நலம் AI" என்ற பெயரில் WhatsApp Chatbot சேவை இன்று முதல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நெஞ்சக நோய் பிரிவில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இச்சேவையின் மூலம் பொது மக்கள் வீட்டிலிருந்தபடியே தங்களின் சுய பதிவு ( One time Registration) மற்றும் OP முன்பதிவை ( Appointment Booking) செய்து கொள்ள முடியும். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நெஞ்சக நோய் பிரிவுகளில் ( Department of Respiratory Medicine) மட்டுமே புறநோயாளிகள் முன்பதிவு செய்து கொள்ளும் முறை இன்றயை தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்ற பிரிவுகளில் உள்ள துறைகளில் படிப்படியாக முன்பதிவு செய்யும் முறை கொண்டுவரப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருத்துவ சேவையை பெற 96192 22999 என்ற எண்ணிற்கு Hi என்று அனுப்பினால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நெஞ்சக நோய் பிரிவில் ( Department of Respiratory Medicine) மருத்துவர்களை பயனாளர்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்,கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி,சேலம் நாகப்பட்டினம், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை,திண்டுக்கல், மயிலாடுதுறை, திருப்பத்தூர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு ஆகிய 22 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் புறநோயாளிகள் மருத்துவரை சந்திப்பதற்கான நேர ஒதுக்கீட்டை பெற ஆதார் கட்டாயம் இல்லை என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.