ETV Bharat / state

பாரம்பரிய விவசாயத்திற்கு புத்துயிர்... களமிறங்கிய மகளிர் சுய உதவி குழுவினர்!

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க விவசாய நிலம் வைத்துள்ள 10 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண் விவசாயி
மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண் விவசாயி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 8, 2025 at 7:50 PM IST

4 Min Read
Choose ETV Bharat

-By இரா.மணிகண்டன்

திருநெல்வேலி: அழிந்து வரும் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கும் நோக்கில் பெண்களை களமிறக்கியுள்ள அரசின் முயற்சிக்கு வரவேற்பு குவிந்து வருகிறது.

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது விவசாயம். நாம் உண்ணும் அரிசியை விலை கொடுத்து எளிதாக கடையில் வாங்குகிறோம். ஆனால், அதனை விளைவிக்க வெயில், மழை, பனி என பாராமல் விவசாயிகள் கடும் சிரமத்தோடு உழைக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

அழிவின் விழும்பில் பாரம்பரிய நெல் ரகங்கள்

அரிசி நெல்லிலிருந்து வருகிறது... நெல் என்றால் ஒரே மாதிரி தானே இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், நெல்லில் நூற்றுக்கணக்கான வகைகள் இருப்பது இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக, இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்தன. ரசாயன உரத்தின் வருகையால் அவை காலப்போக்கில் அழிந்து விட்டன. தற்போது 180 வகை பாரம்பரிய நெல் ரகங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.

பாரம்பரிய நெல் உற்பத்தியில் களமிறங்கியுள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர்
பாரம்பரிய நெல் உற்பத்தியில் களமிறங்கியுள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் (ETV Bharat Tamil Nadu)

இருந்தாலும், பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு முக்கிய காரணம் போதிய மகசூல் கிடைக்காதது தான். ஏனென்றால், பாரம்பரிய நெல் ரகத்தை பயிரிடுவது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதல் மூன்று ஆண்டுகளில், எதிர்பார்த்த மகசூல் கிடைக்காமல், நஷ்டம் ஏற்படவே அதிக வாய்ப்புகள் உள்ளன. இது போன்ற இன்னல்கள் காரணமாகவே, பெரும்பாலன விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுவதில்லை.

தமிழக அரசின் முன்னெடுப்பு

இதனை கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு, பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க ஒரு சூப்பர் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதாவது, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலம் மகளிர் சுய உதவி குழுக்களை பாரம்பரிய விவசாயத்தில் களமிறக்கியுள்ளது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக, அம்பாசமுத்திரம் அருகே உள்ள அயன் திருவாலீஸ்வரம் மற்றும் கபாலிபாறை ஆகிய 2 கிராமங்கள் இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பாரம்பரிய நெல் உற்பத்தியில் களமிறங்கியுள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர்
பாரம்பரிய நெல் உற்பத்தியில் களமிறங்கியுள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் (ETV Bharat Tamil Nadu)

மிகக் குறைந்த வட்டியில் கடன்

தற்போது நெல்லை மாவட்டத்தில் கார் முடிந்து பிசான பருவம் தொடங்கியது. இதில் திருவாலீஸ்வரம் கிராமத்தை சேர்ந்த மகளிர் உதவி குழுவினர் பாரம்பரிய நெல்லை பயிரிடும் பணியில் இறங்கியுள்ளனர். ஏனென்றால், அயன் திருவாலீஸ்வரம் கிராமத்தில் முழுக்க முழுக்க விவசாயத்தை சேர்ந்த மக்களே வாழ்ந்து வருகின்றனர். இங்கு அதிகளவில் விவசாயம் நடைபெறுவதாலேயே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இந்த கிராமத்தை தேர்வு செய்துள்ளனர்.

வழக்கமாக கடனுக்கு 9% வரை வட்டி வசூலிக்கப்படும் நிலையில், பாரம்பரிய நெல் ரகத்தை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது செயல்படுத்தப்படுவதால், வெறும் அரை சதவீதம் வட்டி மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அயன் திருவாலீஸ்வரம் பஞ்சாயத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த, விவசாய நிலம் வைத்துள்ள 10 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய நெல் உற்பத்தியில் களமிறங்கியுள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர்
பாரம்பரிய நெல் உற்பத்தியில் களமிறங்கியுள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் (ETV Bharat Tamil Nadu)

களமிறங்கிய பெண்கள்

ஏற்கனவே, இவர்கள் செயற்கை உரங்களை பயன்படுத்தி வெள்ளை நிற புழுங்கல் அரிசியை பயிரிட்டு வந்தனர். முதல்முறையாக இயற்கை உரத்தை மட்டும் பயன்படுத்தி, பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுகின்றனர். அதற்காக, இவர்களுக்கு அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமி தேவி மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. லட்சுமி தேவி விவசாயத்திற்காக மத்திர அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரோக்கியமான உணவை நாமே விளைவித்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாரம்பரிய நெல் விவசாயத்தில் களமிறங்கி சாதனை படைத்தவர். சிறிய அளவில் பாரம்பரிய விவசாயத்தை தொடங்கிய லட்சுமி தேவி தற்போது, 120 நெல் ரகங்களை பயிரிட்டுள்ளார்.

இந்த திட்டம் குறித்து மேலும் அறிந்து கொள்ள ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில், அயன் திருவாலீஸ்வரம் கிராமத்திற்கு புறப்பட்டோம். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அம்பாசமுத்திரத்தை கடந்து அயன் திருவாலீஸ்வரம் கிராமத்தை அடைந்தோம். ஊருக்குள் சென்றதுமே ஆங்காங்கே நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. தற்போது கார் பருவ அறுவடைக் காலம் என்பதை இதன் மூலம் அறிந்து கொண்டோம். அந்த கிராமத்தில் நெல் மட்டுமில்லாமல் சேம்பு, சிறுகிழங்கு போன்றவையும் பயிரிடப்பட்டுள்ளன. அதை கடந்து பெண்கள் பாரம்பரிய நெல் பயிரிட்டுள்ள பகுதியை அடைந்தோம். அங்கு நெல் நாற்றுகள் முளைத்திருந்தன. பெண்கள் வயலுக்குள் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த கிராமத்தில் மொத்தம் 15 ஏக்கர் பரப்பளவில் பிசான சாகுபடியாக பாரம்பரிய நெல்வகைகளைச் சேர்ந்த நெல்லையப்பர் மற்றும் ஆத்தூர் கிச்சடி சம்பா ஆகியவை பயிரிடப்பட்டுள்ளதை பார்க்க முடிந்தது.

ஆரோக்கிய வாழ்வே முக்கியம்

அப்படியே பேச்சு கொடுத்த போது சங்கரமாரி நம்மிடம் ஆர்வத்துடன் பேச தொடங்கினார். அப்போது அவர், “நான் கடந்த 25 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். என்னிடம் 2 ஏக்கர் நிலம் உள்ளதால், பாரம்பரிய நெல்லை பயிரிடும்படி மகளிர் குழுவிலிருந்து எங்களுக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய அரிசியை சாப்பிட்டால் நோய் வராது என்றார்கள். நமக்குத் தேவையான உணவை நாமே விளைவித்து உண்ணும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆகையால் முதல்முறையாக பாரம்பரிய நெல்லை பயிரிடுகிறோம். இதற்காக, மகளிர் குழுவிலிருந்து முன் கூட்டியே ரூ.50 ஆயிரம் கொடுத்துவிட்டார்கள். நல்ல முறையில் விவசாயம் செய்து, அதிக மகசூல் பெறுவோம்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

மகளிர் சுய உதவிக் குழுவினர் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து பேசிய முத்துலட்சுமி, “ரசாயன உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்ததால், எங்கள் குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்பட்டன. தற்போது, அதைத் தவிர்த்து பாரம்பரிய நெல் ரகத்தை பயிரிட்டுள்ளோம். எங்கள் ஊரில் அதிகளவில் விவசாயம் செய்வதால், எங்கள் கிராமத்தை அரசு தேர்வு செய்துள்ளது. இந்த விவசாயத்திற்காக, மாட்டுச் சாணம் கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம், மீன் அமிலம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்துகிறோம்” என்றார்.

மகிழ்ச்சியோடு புதிய முயற்சி

அடுத்து பேசிய விவசாயி அருணா, “பொதுவாக நாங்கள் ரசாயன உரத்தை தான் பயன்படுத்துவோம். ஆனால், இம்முறை பாரம்பரிய விவசாயம் செய்வதற்காக, மகளிர் குழு எங்களுக்கு உதவியுள்ளது. இது குறித்து இயற்கை விவசாயம் செய்யும் லட்சுமி தேவியை அணுகிய போது, நோயால் அவதிப்பட்ட அவர் பாரம்பரிய நெல் ரகங்களை உண்டு எப்படி மீண்டு வந்தார் என்பதை விளக்கினார். மேலும், நீங்களும் பாரம்பரிய அரிசியை சாப்பிட்டுப் பார்த்து, மற்றவர்களுக்கு கற்றுக் கொடுங்கள் என்றார். அவர் கொடுத்த ஊக்கத்தின்பேரில், மகிழ்ச்சியோடு பாரம்பரிய விவசாயத்தை கையில் எடுத்துள்ளோம்” என்றார் அருணா.

இதையும் படிங்க: நான் ஓர் உழத்தி! 120 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த லட்சுமி தேவி!

தொடர்ந்து பேசிய மகளிர் சுய உதவிக்குழு தலைவர் மணியம்மை, “பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட 10 பேரை தேர்வு செய்து தலா ரூ.50 ஆயிரம் கடன் வழங்கியுள்ளோம். இந்த திட்டத்திற்கு தகுதி பெற விவசாயம் செய்யும் பெண்கள், சொந்தமாக நிலம் வைத்திருக்க வேண்டும் அவ்வளவு தான். அரசின் இந்த புதிய முயற்சியில் முனைப்போடு செயல்பட்டு சாதித்துக் காட்டுவோம்” என்றார்.

இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, “தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த திட்டத்தை செயல்படுத்தும்படி அரசு எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மகளிர் குழுக்களுக்கு கடன் கொடுப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு முதல்முறையாக பாரம்பரிய நெல் ரகத்தை பயிரிட கடன் கொடுத்துள்ளோம். அதன்படி, முதற்கட்டமாக நெல்லையில் 2 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைத் தேர்வு செய்யவுள்ளோம்” என்று தெரிவித்தனர்.