வன விலங்குகளின் டிஎன்ஏ மாதிரிகள் ஆய்வுக்காக சேமிப்பு - தமிழக அரசு
வனவிலங்குகளின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் போது, கட்டாயம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அனைத்து வனத்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக வனத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Published : January 3, 2026 at 9:16 PM IST
சென்னை: வனப்பகுதிகளில் சந்தேகத்துக்குரிய வகையில் இறக்கும் யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் டிஎன்ஏ மாதிரிகள் ஆய்வுக்காக சேமித்து வைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி வெள்ளையங்கிரி ஆண்டவர் கோயிலில், கடந்த 2024 அக்டோபரில் நுழைந்த காட்டு யானை, அடுத்த 2 நாட்களில் மர்மமான முறையில் இறந்துள்ளது. ஆனால், இறந்த யானையின் உடலுறுப்புகளை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பாமல், பிரேதப் பரிசோதனை செய்து, புதைத்து விட்டதாக விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன், வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வில் முறையீடு செய்தார்.
இதையடுத்து, வனப்பகுதிகளில் உயிரிழக்கும் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் போது, கட்டாயம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும், இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப முதன்மை தலைமை வன பாதுகாவலருக்கு, சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வின் கீழ் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி, யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் போது, கட்டாயம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அனைத்து வனத்துறை அதிகாரிகளுக்கும், கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த சுற்றறிக்கையில், ‘அசல் வீடியோ பதிவுகளை மண்டல அளவில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும், சந்தேகத்துக்குரிய வகையில் இறந்த யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் டி.என்.ஏ, மாதிரிகளை கட்டாயம் சேகரித்து, பாதுகாக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி 23 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

