தீபாவளிக்கு ஊருக்கு கிளம்பிட்டீங்களா? இன்றே தொடங்கியது சிறப்பு பேருந்துகள் சேவை!
சென்னையில் இருந்து 14,268 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Published : October 16, 2025 at 3:23 PM IST
சென்னை: தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 14,268 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை வரும் 20 தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி திங்கட்கிழமை கொண்டாப்படுவதால் சனி மற்றும் ஞாயிறு சேர்த்து நீண்ட விடுமுறையாக உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் நான்கு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2092 பேருந்துகளுடன் 5900 சிறப்பு பேருந்துகள் என நான்கு நாட்களும் சேர்த்து 14,268 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் என ஒட்டு மொத்தமாக 20,378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
குறிப்பாக கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 4 நாட்களில் 5900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி இன்றைய தினம் 760 பேருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதே போல மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து அதிக அளவில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள வர உள்ளதால் பயணிகளின் நலன் கருதி அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
| இதையும் படிங்க: தீபாவளி சிறப்பு ரயில்: ஊருக்கு கிளம்ப தயாரா? தாம்பரம் டூ கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்! |
அதன்படி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் தலைமையில் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி உட்பட 6 உதவி ஆணையர்கள் என 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

