ETV Bharat / state

டாஸ்மாக் தொடர்பான புகார்கள்: கட்டணமில்லா உதவி எண்கள் அறிவிப்பு

இந்த வாடிக்கையாளர் சேவை மையம் 24 மணி நேரமும், 7 நாட்களும் (24×7) செயல்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக்
டாஸ்மாக் (கோப்புப்படம்) (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 1, 2026 at 5:12 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: டாஸ்மாக் தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேர கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மற்றும் உதவி (தொலைபேசி, வாட்ஸ்அப்) எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி அமைந்ததில் இருந்து டாஸ்மாக்கில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக, பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வசூலிப்பதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற சூழலில், டாஸ்மாக் சில்லறை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளான ஊதிய உயர்வு, மின்சார செலவு, பெட்டி இறக்கும் செலவு என அனைத்தையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார்.

இத்தனை வசதிகள் செய்த பிறகும், நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகம் பெற்றால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

இந்நிலையில், டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் அதன் சேவைகள் தொடர்பாக பொதுமக்கள், நுகர்வோர் தங்களது புகார்கள், குறைகள் மற்றும் இதர பிரச்சினைகளை எளிதில் தெரிவிக்கும் வகையில், டாஸ்மாக் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சேவை ஆக. 31ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் தங்களது புகார்கள், குறைகள், விசாரணைகளைத் தெரிவிக்க 1800-889-2015 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணையும், +91-73977 20230 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

இந்த வாடிக்கையாளர் சேவை மையம் 24 மணி நேரமும், 7 நாட்களும் (24×7) செயல்படும். பொதுமக்கள் மற்றும் நுகர்வோரிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வாங்க சொன்னது யார்? திமுக Vs தவெக பேரவையில் வார்த்தை மோதல்

மேலும், டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். அதன்படி,

  • Facebook – TASMAC Official
  • X – @TasmacOfficial
  • Instagram – @tasmac_official
  • YouTube – TASMAC Official

ஆகிய சமூக வலைத்தள கணக்குகள் மூலம் தகவல்களைப் பெறவும், புகார்களைத் தெரிவிக்கவும் முடியும். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவற்றுக்கு உரிய தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.