இன்னும் 2 வாரத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணை - அப்டேட் கொடுத்த அரசு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஜன.3 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு, ஜன.6 ஆம் தேதி தமிழக அமைச்சரவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Published : January 8, 2026 at 5:52 PM IST
மதுரை: தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் அறிவிப்பாணையை (GO) இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லை சேர்ந்த பிரடெரிக் ஏங்கெல்ஸ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த 2014 ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘தமிழகத்தில் 01.04.2003-க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இது நாள் வரை புதிய ஓய்வூதிய திட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. மத்திய அரசு 2013-ல் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைத்துள்ளது. தமிழ்நாடு இதனைப் பின்பற்றவில்லை.
ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்திய வல்லுநர் குழு, அரசிடம் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த பரிந்துரைகளைப் பின்பற்றுவது தொடர்பாக அரசாணையோ, விதிமுறைகளோ இதுவரை வகுக்கப்படவில்லை. இதனால் ஓய்வூதிய பலன்களைப் பெற முடியாமல் பலர் தவிக்கின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது, தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “தமிழ்நாடு அரசு தற்போது பழைய ஓய்வூதிய திட்ட அடிப்படையில், ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ (TamilNadu Assured Pension Scheme – TAPS) அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பாணையை இரண்டு வாரங்களில் வெளியிட உள்ளோம்” எனத் தெரிவித்தார். அதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.
| இதையும் படிங்க: சவுக்கு சங்கரின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கு - காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு |
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டுகாலமாகப் போராடி வந்தனர். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய புதிய “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என கடந்த 3-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

