ETV Bharat / state

போர் பதற்றம்: தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

வளைகுடா நாடுகளில் தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து, நிலைமையைக் கண்காணித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Smoke rises on the skyline after an explosion in Tehran, Iran
ஈரானில் ஏற்பட்ட தாக்குதலுக்கு பிறகு புகை செல்லும் காட்சி (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 1, 2026 at 8:37 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள தாக்குதல் காரணமாக, ஈரான் மற்றும் அதை சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், குவைத் சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறாது.

மேலும், போர் பெரிதாகும் சூழல் நிலவுவதால், ஈரானில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவையின்றி வெளியிடங்களில் நடமாடுவதை தவிர்க்குமாறும், முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்கவும் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கான உதவி எண்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் – இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.

அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது.

இதையும் படிங்க: இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் 28 விமானங்கள் ரத்து

மேலும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது. போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம். தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள்:

011-24193300 (Land line)

92895 16712 (Mobile Number with Whatsapp)

அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்:

இந்தியாவிற்குள் – 1800 309 3793

வெளிநாடு – +91 80 6900 9900 (Missed Call)

தொடர்புக்கு – +91 80 6900 9901