கனிமொழி ஒருமுறை திரும்பிப் பாருங்கள்; குதிரை பேரம் விமர்சனத்திற்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கடை ஒடாது என முடிவு செய்து, எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைவது எப்படி குதிரை பேரம் என்று கூற முடியும் என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்

Published : July 3, 2026 at 6:30 PM IST
காஞ்சிபுரம்: 'வாஷிங் மெஷின்' மாறுதல் என கூறும் கனிமொழி, ஒருமுறை தனக்கு பின்னால் இருப்பவர்களை அல்லது பக்கத்தில் இருப்பவர்களை பார்த்தால், வேறு கட்சியில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவராக பதவியேற்ற மாணிக்கம் தாகூர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் ஆதரவாளர்களுடன் வருகை தந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வருகிறது. தமிழ்நாட்டில் கட்சி மாறுதல் என்பது புதிதல்ல, அனைத்து கட்சியினரும், முன்பு பல்வேறு கட்சிக்கு மாறி உள்ளனர்.
'வாஷிங் மெஷின்' மாறுதல் என கூறும் கனிமொழி, ஒருமுறை தனக்கு பின்னால் இருப்பவர்களை பார்க்க வேண்டும் அல்லது உடன் பக்கத்தில் இருப்பர்களை காண வேண்டும். அப்படி பார்த்தால் அவர்கள் வேறு கட்சியில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த 50 நாட்களாக குதிரை பேரம் என்பதை பெரும்பாலானோர் பேசிய நிலையில், தற்போது தவெக எம்எல்ஏ இளையராஜா குதிரை பேரம் நடந்ததாக புகார் கொடுத்துள்ளார். வேண்டுமென்றே கூறாமல், முதல்முறையாக குதிரை பேரம் மூலமாக எம்எல்ஏவை விலைக்கு வாங்க இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மிக முக்கியமான இந்த வழக்கை அரசு சரியான முறையில் கையாள வேண்டும். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதை யார் செய்திருந்தாலும், அது தான் உண்மையான குதிரை பேரம். அதுபோன்ற செயல் மக்களுக்கு செய்யும் துரோகம். அதே நேரத்தில், எதிர்காலம் இல்லாத கட்சியை விட்டு வேறு கட்சிக்கு செல்வது வேறு விவகாரம்” என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.
மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய அவர், “மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யாமல் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மோடியிடம் பேசி தீர்வு காண தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தயாராக உள்ளாரா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசுகையில், “எம்ஜிஆர் அதிமுக அல்லது ஜெயலலிதா அதிமுகவை விட்டோ எம்.எல்.ஏக்கள் வெளியேறவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கடை ஒடாது என முடிவு செய்து, எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைவது எப்படி குதிரை பேரம் என்று கூற முடியும்?. எம்எல்ஏவை விலைக்கு வாங்க இளையராஜாவிடம் ரூ.35 கோடி விலை பேசியது தான் குதிரை பேரம். மக்கள் அதனை புரிந்து கொள்ள வேண்டும்” என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

