நெம்மேலிக்கு சென்ற முதல்வர் விஜய் கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்
நெம்மேலியில் 400 எம்.எல்.டி கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தின் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Published : July 6, 2026 at 10:19 PM IST
செங்கல்பட்டு: நெம்மேலியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தின் புதிய கட்டுமான பணிகளை தமிழக முதலமைச்சர் விஜய் இன்று ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் தமிழ்நாடு அரசின் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 100 எம் எல் டி மற்றும் 150 எம் எல் டி என இரண்டு அலகுகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திடீரென நேரில் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வுக்குச் சென்ற முதலமைச்சர் கடல் நீர் எவ்வாறு குடிநீராக மாற்றப்படுகிறது என்பதை துறை சார்ந்த அதிகாரியிடம் கேட்டு அறிந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் 400 எம்.எல்.டி கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தின் பணிகளையும் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டார்
அப்போது முதலமைச்சர் விஜய்யை காண்பதற்காக நீண்டநேரமாக அப்பகுதியில் காத்திருந்த பொதுமக்களை பார்த்து சிரித்த முகத்துடன் கையசைத்தபடி தனது கான்வாயில் அவர் உற்சாகத்துடன் சென்றார்.

இதனிடையே, திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறும்போது, "இத்திட்டத்தை துவங்கி வைக்கும்போது அப்பகுதியின் நுழைவு வாயிலில் மிகப்பெரிய கல்வெட்டை மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக கம்பீரமாக அமைக்கப்பட்டிருந்த அந்த கல்வெட்டை துணியை கொண்டு மூடி முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரை தற்போதைய ஆட்சியாளர்கள் நீக்கி விட்டார்கள்.
எந்த நோக்கத்திற்காக கல்வெட்டை நீக்கினீர்கள் என்று கேட்டதற்கு அது சிதலம் அடைந்துவிட்டதாகவும், அதை சரி செய்து வருவதாகவும், அதை ஒரு வாரத்துக்குள் சரி செய்து தருவதாகவும் தெரிவித்தனர். அப்படிப்பட்ட கம்பீரமான கல்வெட்டை ஒரு வாரத்திற்குள் சீரமைத்து தராவிட்டால் திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்பதை எச்சரிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

