ETV Bharat / state

முதலமைச்சர் விஜய்யின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் - களத்தில் இறங்கி காவல்துறை

தமிழ்நாடு முதலமைச்சருக்கு மத்திய பாதுகாப்பு அமைப்புகளும், தமிழ்நாடு காவல்துறையும் உயர்நிலை பாதுகாப்பு வழங்கி வருகின்றன

சிசிடிவி காட்சி ஆய்வு பணி
சிசிடிவி காட்சி ஆய்வு பணி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 8, 2026 at 8:41 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: முதவமைச்சர் விஜய்யின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில், தலைமைச் செயலகத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலைமைச் செயலகம் வெளியே தினமும் மாலை நேரங்களில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதலமைச்சரை காண வருகை தருகின்றனர். முதலமைச்சர் அலுவலகப் பணிகளை முடித்து வீட்டிற்கு புறப்படும் போது, பொதுமக்கள் கையசைத்து வரவேற்பு அளிப்பதுடன், முதலமைச்சரும் அவர்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்து செல்கிறார்.

ஓரிரு தினங்களுக்கு முன்பு, தலைமைச் செயலகத்திலிருந்து வெளியே சென்ற முதலமைச்சர், மனுக்களுடன் காத்திருந்த பொதுமக்களை கவனித்து, தனது பாதுகாப்பு வாகனங்களை நிறுத்துமாறு உத்தரவிட்டு, நேரடியாக அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிசிடிவி கேமராக்கள் ஆய்வு
சிசிடிவி கேமராக்கள் ஆய்வு (ETV Bharat Tamil Nadu)

இதன் எதிரொலியாத, தலைமைச் செயலகத்திற்குள் நுழையும் அனைவரும் பலத்த பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், தலைமைச் செயலகத்திற்கு வெளியே பொதுமக்கள் சுதந்திரமாக கூடும் பகுதியாக இருப்பதால், அந்த பகுதியில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ராஜாஜி சாலையில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் முழுமையாக செயல்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த கேமராக்களின் காட்சிகள் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: தான் பிறந்த எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு; குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்

இந்த நிலையில் தலைமைச் செயலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் பழுதடைந்த கேமராக்கள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் உடனடியாக சரிசெய்யப்படுவதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து கேமராக்களும் முழு செயல்திறனுடன் இயங்குவதை உறுதி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சருக்கு மத்திய பாதுகாப்பு அமைப்புகளும், தமிழ்நாடு காவல்துறையும் உயர்நிலை பாதுகாப்பு வழங்கி வருகின்றன. முதலமைச்சர் பொதுமக்களிடம் மனுக்களை பெறும் நேரங்களில், அடையாளம் தெரியாத நபர்கள் பாதுகாப்புக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவதைத் தடுக்கவும், எந்தவித பாதுகாப்பு குறைபாடும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.