மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதல்வர் விஜய்; முன்வைத்த கோரிக்கைகள் என்ன?
தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என்று நிதியமைச்சரிடம் முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார்.

Published : May 27, 2026 at 8:28 PM IST
புதுடெல்லி: டெல்லியில் மத்திய நிதியைமச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய தமிழக முதல்வர் விஜய், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்கள், கோவை, ஓசூர், மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தவெக தலைவர் விஜய், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதலமைச்சராக கடந்த 10ஆம் தேதி பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கான உர விநியோகம், மீனவர் பிரச்சனை, மேகதாது அணை பிரச்சனை ஆகியவை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு விஜய் கடிதம் எழுதியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இன்று டெல்லி சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியை மரியாதை நிமித்ததமாக அவர் சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் விஜய் அளித்தார். அப்போது, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தியதாக தெரிகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை புதுடெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, "விரைவான வளர்ச்சியைப் பெற்று வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. இத்தகைய வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இன்றியமையாதது. எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டார்.
| இதையும் படிங்க.. சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கட்டாயம்: இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு |
மேலும், "தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை (Institutes of National Importance) தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும். தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திட மெட்ரோ இரயில் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அந்த திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டார்.

