நேபாளம் சென்ற திருநெல்வேலி அர்ச்சகர் - குடும்பத்துக்கு கிடைத்த மகிழ்ச்சி செய்தி
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், தமிழ்நாடு அரசும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Published : August 29, 2026 at 4:10 PM IST
திருநெல்வேலி: நேபாளம் சென்ற திருநெல்வேலி அர்ச்சகர் நலமுடன் இருப்பது தெரிய வந்ததால் அவரது குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 616 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 2,000 பேரை காணவில்லை என்றும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது.
கைலாய யாத்திரைக்காக நேபாளம் சென்றுள்ள தமிழ்நாடு யாத்ரீகர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், தமிழ்நாடு அரசும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது. அத்துடன், மீட்புப் பணிகள் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தது. அதன் ஒருபகுதியாக, கைலாய யாத்திரை சென்ற தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மீண்டும் தமிழகம் திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம், சிந்து பூந்துறை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 69). மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள சுப்பிரமணியன் கோவில் அர்ச்சகராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், திருப்பூரை சேர்ந்த 40 பேர் கொண்ட குழுவுடன், கைலாய யாத்திரைக்காக நேபாளம் சென்றுள்ளார்.
இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் அவரது நிலை குறித்து சுப்பிரமணியனின் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பெரு வெள்ளம் ஏற்பட்டபோது சுப்பிரமணியன் மற்றும் அவரது குழுவினர் சம்மந்தப்பட்ட பகுதியில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
எனினும், சுப்பிரமணியனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், அவர் நேபாளத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், சுப்பிரமணியனை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
அப்போது, அவர் தான் நலமுடன் இருப்பதை உறுதிச் செய்ததுடன், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் சுப்பிரமணியனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
தமிழ்நாட்டில் இருந்து கைலாயத்திற்கு சென்ற யாத்ரீகர்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர வேண்டும் என்ற கோரிக்கை அதிகம் எழுந்துள்ளது.
| இதையும் படிங்க: FQL ஆன்லைன் நிதி மோசடி; 7000-க்கும் மேற்பட்டோர் புகார் |

