EXCLUSIVE: 100 வயதை கடந்து வாழும் மனிதர்களிடம் இப்படியொரு ஒற்றுமையா? ஆராய்ச்சி மாணவி கண்டுபிடித்த ரகசியம்!
இந்தியர்களின் DNA மாதிரிகள் ஒருவேளை கிடைத்திருந்தால், அவர்களது ஆரோக்கிய முதுமைக்கான ரகசியமும் நமக்கு தெரிந்திருக்கும் என்கிறார் ஆராய்ச்சி மாணவி.

Published : November 6, 2025 at 4:46 PM IST
-By இரா. மணிகண்டன்
திருநெல்வேலி: நூறு வயதை கடந்து வாழும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த 21 நபர்களின் 7.5 லட்சம் மரபணு (டிஎன்ஏ) மாதிரிகள் ஒற்றுமையாக இருப்பதை தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
பொதுவாக மனிதர்கள் முதுமையில் பல்வேறு நோய்களால் சிரமப்படுவதை பார்த்திருப்போம். ஆனால், 100 வயதைக் கடந்து வாழும் நபர்களுக்கு அப்படிப்பட்ட நோய்கள் வருவதில்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக மாணவி ஆட்ரி ப்ரீனா கூறினார்.
உலகில் வேகமாக வளந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்தியில் ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் புதுப்புது சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மனிதர்களின் ஆரோக்கிய முதுமைக்கான காரணம் என்ன என்பதை மாணவி ஒருவர் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்.
வியக்கத்தக்க மருத்துவ வளர்ச்சியின் காரணமாக, ஒருபுறம் உலகளவில் இன்று மனிதனின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துள்ளது. மறுபுறம் இயந்திரமயமான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் மனிதர்கள் இன்று 60 வருடங்கள் வாழ்வதே அதிசயமாக உள்ளது. அப்படியே ஒரு மனிதன் 60 ஆண்டுகளை கடந்து வாழ்ந்தாலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வது அரிதான விஷயமாகவே உள்ளது. ஆனால் பாட்டன், பூட்டன் என நம் முன்னோர்கள் 100 வயதை கடந்தும் எப்படி ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளார்கள் என்பதை எண்ணும்போது நமக்கு வியப்பாக உள்ளது.
நாகர்கோவில் மாணவி புதிய முயற்சி
இந்த வியப்பின் நீட்சியாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் உலகில் 100 வயதிற்கு மேல் வாழும் முதியவர்களின் ஆரோக்கியத்துக்கான ரகசியத்தை கண்டறியும் ஆராய்ச்சியை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த ஆட்ரி ப்ரீனா, உயிரிவேதியியல் (Biochemistry) பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பில் கடந்த 2020-ல் சேர்ந்துள்ளார். முனைவர் பட்டம்பெற பல்வேறு புதிய விஷயங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, இந்தியாவில் இதுவரை யாரும் செய்யாத ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்த ஆட்ரி ப்ரீனா, 100 ஆண்டுகளுக்கு மேல் வாழும் மக்களின் ஆரோக்கியத்திற்கான காரணம் என்ன? என்பதை ஆய்வின் மூலம் கண்டறிய வேண்டுமென முடிவெடுத்தார். தமது ஆராய்ச்சியின் அடித்தளமாக, அமெரிக்காவை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்திடமிருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நூறு வயதுக்கு மேல் வாழும் 21 பேரின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்துள்ளார்.

ஆராய்ச்சியில் ஆச்சர்ய தகவல்
அதனை தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்ப துறை தலைவர் சுதாகர் வழிகாட்டுதலோடு இந்த ஆய்வை தொடங்கியுள்ளார். உலகின் பல பகுதிகளில் இருந்தும் பெறப்பட்ட 106 முதல் 117 வயது வரையிலான 21 நபர்களின் டிஎன்ஏவை ஆய்வு செய்தார். அவர்களில் 2 பேர் ஆப்பிரிக்காவையும், 2 பேர் இஸ்ரேலையும், 16 பேர் ஐரோப்பிய வம்சாவளியையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த 5 ஆண்டுகள் தீவிரமாக நடந்த இந்த ஆய்வின் முடிவில், 21 நபர்களிடமும் 7.5 லட்சம் மரபணு மாற்றங்கள் (SNP- single nucleotide polymorphism) ஒரே மாதிரியாக இருந்தது ஆச்சரியத்தை அளித்துள்ளது. இவர்களுக்குள் இனம், வசிப்பிடம், வாழ்க்கை முறை என பல வேறுபாடுகள் இருந்தாலும், நீண்ட ஆயுளுக்கான சில மரபணுக் கூறுகள் அனைவரிடமும் பொதுவாக இருந்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
நீண்ட ஆயுளுக்கு அடிப்படை காரணம் இதுவா?
அதாவது நோய் எதிர்ப்பு சக்தி, உடல் நோய்களை எதிர்த்துப் போராடும் திறன், ஆற்றல் உற்பத்தி, உடல் செல்களில் ஆற்றல் உருவாகும் செயல்முறை, ஆர்என்ஏ நிலைத்தன்மை, மரபணு தகவல்களை துல்லியமாகப் பரிமாறும் திறன், மூளையின் நுண்ணறிவு செயல்பாடுகளுடன் தொடர்புடையது போன்ற அரிதான மரபணு கூறுகள், நீண்ட ஆயுளுக்கான அடிப்படை காரணிகளாக இருக்கலாம் என ஆராய்ச்சியின் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் மூலம் முதுமைக்குப் பின் உள்ள அறிவியல் காரணங்கள் என்ன என்பதை கண்டுபிடிக்கலாம் என்று பேராசிரியர் சுதாகர் கூறுகிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், "உலகில் 100 முதல் 110 வயதுக்கு மேல் வாழும் 21 பேரின் டிஎன்ஏ மாதிரிகளை ஆய்வு செய்தோம். இதன் மூலம் மனிதர்கள் நீண்ட ஆயுளோடு வாழும் வாய்ப்பு மரபணுக்கள் மூலம் கிடைக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. சிலர் ஏன் அதிக நாட்கள் வாழ்கிறார்கள்? சிலரால் அப்படி வாழமுடியாதது ஏன்? என்பதை இந்த ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் முதுமை எப்படி ஏற்படுகிறது? முதுமைக்குப் பின்னுள்ள அறிவியல் காரணங்கள் என்ன? என்பதையும் தெரிந்துக் கொள்ளலாம். இந்த 21 பேரில் இந்தியர்களின் மரபணு மாதிரி மட்டும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அதற்கு இந்தியாவில் இன்னும் அறிவியல் தொழில்நுட்பம் வளர வேண்டும். ஆய்வுக்காக, அரசு அதிக நிதி ஒதுக்கி வயதானவர்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் 100 வயதுக்கு மேல் வாழும் இந்தியர்களின் ரகசியத்தை கண்டறிய முடியும். வெளிநாட்டில் சில தொண்டு நிறுவனங்கள் அந்நாட்டு அரசிடம் நிதி பெற்று இந்த பணியில் ஈடுபடுகின்றனர். மாறாக, முதுமைக்குப் பின்னுள்ள அறிவியல் பின்புலத்தை தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் நம்மிடம் குறைவாகத்தான் இருக்கிறது" என்று பேராசிரியர் சுதாகர் வருத்தம் தெரிவித்தார்.
ஆய்வில் கண்டறிந்தது என்ன?
தமது வியக்கத்தக்க சாதனைகள் குறித்து மாணவி ஆட்ரி ப்ரீனா ஈடிவி பாரத்துக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது, "நூறு வயதிற்கு மேல் வாழும் மனிதர்கள் நமக்கு மிகவும் முக்கியம். ஏனென்றால் அவர்கள் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்த வாழ்க்கை முறையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், அவர்கள் ஆரோக்கிய வாழ்விற்கு என்ன காரணம்? என்பதை அறிந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள 21 நபர்களின் மரபணு மாதிரிகளை ஆய்வு செய்தோம்.
குறிப்பாக, SNP என்றழைக்கப்படும் மரபணு மாற்றங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், 21 பேரிடமும் 7.5 லட்சம் மரபணு மாற்றங்கள் ஒரேமாதிரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மரபணு மாற்றம் எந்தெந்த இடத்தில் இந்த 21 பேருக்கும் சமமாக இருக்கிறது என்பதை ஆராய்ந்தோம். புரதத்தின் கட்டமைப்பை மாற்றக்கூடிய SNP எனப்படும் மரபணு மாற்றங்கள் மட்டும் 11 ஆயிரத்தில் 4,980, 21 பேருக்கும் சமமாக இருந்ததை கண்டறிந்தோம். இந்த மரபணு மாற்றங்களை மதிப்பீடு செய்து அடுத்தகட்ட ஆய்வை மேற்கொண்டோம்," என்றார்.
மேலும் பேசிய அவர், "பொதுவாக மனிதர்கள் முதுமையில் ஏராளமான நோய்களுக்கு ஆளாகி சிரமப்படுவதை பார்க்கிறோம். ஆனால், 100 வயதைக் கடந்தவர்களுக்கு அப்படிப்பட்ட நோய்கள் வருவதில்லை என்பது எனது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதில் கூடுதல் ஆய்வு மேற்கொண்டால் அதன் மூலம் அவர்களுக்கான ஆரோக்கிய ரகசியம் குறித்து தெரியவரும். அடுத்தகட்டமாக, மரபணு மாற்றங்கள் ஒரு ஜீனில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கண்டுபிடிக்க இந்த ஆய்வு உதவும். அதேசமயம், 100 வயதுக்கு மேல் உள்ளவர்களின் மரபணு மாற்றங்களை (SNP) பிறரின் உடம்பில் செலுத்தி அவர்களது ஆயுளை நீட்டிக்க முடியாது," என்கிறார் ஆட்ரி ப்ரீனா.
இந்தியர்களின் மரபணு கிடைக்கவில்லை
தொடர்ந்து ஆர்வமுடன் பேசிய அவர், "இந்த மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பெட்டர் ஹியூமன் என்ற தொண்டு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது. இந்த நிறுவனம் 100 - 110 வயதுக்கு மேல் வாழும் நபர்களின் சலைவா, முடி, ரத்தம் போன்ற மாதிரிகளை சேகரித்து பாதுகாத்து வைத்துள்ளது. ஆகையால், அவர்களிடம் இருந்து அவ்வளவு எளிதாக மாதிரிகளை வாங்க முடியாது. அதற்கென ஒரு கமிட்டு உள்ளது. நான் நீண்ட முயற்சிக்கு பிறகு 2019 ஆம் ஆண்டு மாதிரிகளைப் பெற்று, 2020ஆம் ஆண்டு ஆய்வை தொடங்கினேன்.
இந்தியர்களின் மரபணு மாதிரிகள் எனக்கு கிடைக்கவில்லை. அதற்காக, இந்தியாவில் 100 வயதை கடந்து வாழ்பவர்கள் இல்லை என்று அர்த்தமில்லை. ஒருவேளை இந்திய மக்களின் மரபணு மாதிரிகள் கிடைத்திருந்தால் அவர்களின் முதுமைக்கான ரகசியமும் நமக்கு தெரிந்திருக்கும்.
ஆனால் அவர்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து பாதுகாத்து வைக்கும் அளவிற்கு இந்தியாவில் இன்னும் தொழில்நுட்பம் வளரவில்லை. பெங்களூருவில் முதியோர்கள் குறித்து ஆய்வு செய்யும் மையம் உள்ளது. ஆனால், டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து பாதுகாத்து வைக்கும் அளவிற்கு அங்கே தொழில்நுட்ப வசதி கிடையாது. அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் இருந்தால், இந்திய மக்களின் ஆரோக்கிய முதுமைக்கான காரணத்தையும் ஆய்வு செய்ய முடியும்.
அதிக நிதி ஒதுக்க வேண்டும்
இதற்கு, அறிவியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஒரு சாதாரண பல்கலைக்கழகத்தில் இருந்து என்னால் இவ்வளவு பெரிய ஆய்வை மேற்கொள்ள முடிகிறதென்றால், அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பான ஆய்வுகளை நம்மால் முன்னெடுக்க முடியும்," என்கிறார் ஆட்ரி ப்ரீனா நம்பிக்கையுடன்.
மாணலி ஆட்ரி ப்ரீனா மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் ஹியூமன் ஜெனாமிக்ஸ் (Han geneomics) என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது. 100 வயதை கடந்தும் வாழும் மனிதர்களுக்குள் பொதிந்துள்ள ரகசியம் என்ன? என்பது குறித்து சர்வதேச அளவில் பலர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் முதன்முதலாக இந்த ஆய்வு தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவி மேற்கொண்டுள்ளார் என்பது பாராட்டத்தக்கது.

