திருநெல்வேலி இரட்டை கொலை வழக்கு - 3 பேர் கைது
திருநெல்வேலி இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Published : July 4, 2026 at 7:31 PM IST
திருநெல்வேலி: வீரவநல்லூர் அருகே தந்தை மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூலை 02- ஆம் தேதி அன்று திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து தனது மகன்களான ஜெயராஜ், சின்னத்துரை ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த மர்மக்கும்பல், காளிமுத்துவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் காளிமுத்து மற்றும் அவரது இருமகன்களும் கீழே விழுந்தனர். இதையடுத்து, மர்மகும்பல் அவர்கள் மூவரையும் கொடூரமாகத் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகனான ஜெயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு மகனான சின்னத்துரை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம், திருநெல்வேலி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை உயரதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர். அதேபோல், மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடைபெற்றது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், சுமார் 20 ஆண்டுகளாக இரு குடும்பத்தினருக்கும் இடையே நிலவும் தீரா பகையால் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரிய வந்தது. மேலும், இரு குடும்பத்தினரும் மாறி மாறி கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
கொலை சம்பவம் குறித்து வீரவநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க இரண்டு டிஎஸ்பிக்கள், நான்கு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. விசாரணையில் இந்த இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மகேஷ் (வயது 29), குமார் என்ற கொக்கி குமார் (வயது 23) மற்றும் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வன் (வயது 29) ஆகிய மூன்று பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

