திருச்சுழி தொகுதியை கைப்பற்றினார் தங்கம் தென்னரசு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026 : திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் தங்கம் தென்னரசு, அதிமுக தரப்பில் ராஜவர்மன், நாதகவில் ஆவாரங்காடு கார்த்திக் ராஜா, தவெகவில் சமயன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

Published : May 4, 2026 at 1:47 AM IST
|Updated : May 4, 2026 at 8:41 PM IST
திருச்சுழி (விருதுநகர்): திமுகவின் எழுதப்படாத கோட்டையாக விளங்கிவரும் திருச்சுழியை இந்த முறையும் தங்கம் தென்னரசு கைப்பற்றியுள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவானது ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. எஸ்.ஐ.ஆருக்கு பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் 85.15% ஆக பதிவாகியுள்ளது. விஐபி தொகுதிகள் நிறைந்த மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் இந்த தேர்தலில் 84.85% வாக்குகள் பதிவாகியுள்ளன.
திமுகவின் கோட்டையாக அறியப்படுகிற திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 2,04,293 வாக்காளர்கள் உள்ள நிலையில், இந்த தேர்தலில் 87.23% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு, 2008ஆம் ஆண்டு இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மூன்று தேர்தல்களிலுமே இந்த தொகுதியில் திமுகவின் தங்கம் தென்னரசு தான் வெற்றி பெற்றார்.
4வது முறையாக இந்த தேர்தலிலும் திமுக சார்பில் தங்கம் தென்னரசு தான் களம் கண்டுள்ளார். அதிமுக சார்பில் ராஜவர்மன் களமிறக்கப்பட்டுள்ளார். முன்பு டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்த இவர், திருச்சுழி தொகுதி தனக்கு ஒதுக்கப்பட்டதற்கு முதலில் ஆட்சேபம் தெரிவித்தார். தவெக சார்பில் சமயன் களமிறங்கியுள்ளார். நாதக சார்பில் ஆவாரங்காடு கார்த்திக் ராஜா களமிறங்கினார். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 23 வேட்பாளர்கள் திருச்சுழி தொகுதியில் போட்டியிட்டுள்ளனர்.
திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குள் திருச்சுழி, நரிக்குடி ஆகிய ஊராட்சிகளும் காரியாபட்டி, மல்லாங்கிணறு ஆகிய பேரூராட்சிகளும் உள்ளன. நகராட்சிகளே இல்லாத ஒரே தொகுதியாக இத்தொகுதி காணப்படுகிறது. தொகுதி முழுக்கவும் கிராமங்களாக இருப்பதாலும், வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வேலைவாய்ப்புக்காக தங்களுக்கென ஒரு தொழிற்சாலை அமைத்து தரவேண்டும் என்பது இங்குள்ள மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கிறது.
முன்னிலை நிலவரம்
இம்முறை திமுக, அதிமுக, தவெக, நாதக என 4 முனை போட்டி நிலவியிருக்கிறது. கடந்த 3 முறையும் திமுக இந்த தொகுதியை கைப்பற்றிய நிலையில், இந்த முறையும் திமுகவின் தங்கம் தென்னரசு 1914 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வகித்தார். இந்நிலையில் இரண்டாம் இடம் வகித்த தவெக சமயனை பின்னுக்கு தள்ளி தொகுதியை கைப்பற்றினார் தங்கம் தென்னரசு.
| வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி - ஒரு பார்வை | ||
| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
| 2021 | தங்கம் தென்னரசு | திமுக |
| 2016 | தங்கம் தென்னரசு | திமுக |
| 2011 | தங்கம் தென்னரசு | திமுக |

