ETV Bharat / state

தீக்குச்சி குடோனில் தீ விபத்து: உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

தீக்குச்சி குடோனில் பணியாற்றி வந்த தொழிலாளி பிட்டர் கார்த்திக் என்பவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீக்குச்சி குடோனில் தீ விபத்து
தீக்குச்சி குடோனில் தீ விபத்து (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 3, 2026 at 12:42 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: தீக்குச்சி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் பகுதியில் உள்ள பசுவந்தனை சாலையில், முருகன் என்பவருக்கு சொந்தமான பால விக்னேஷ் என்ற பெயரில் தீப்பெட்டி ஆலை உள்ளது. இந்த ஆலையின் எதிரே அந்த தீப்பெட்டி ஆலைக்கு சொந்தமான தீக்குச்சி குடோன் உள்ளது. அந்த குடோனில் நேற்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அதில் மூன்று தொழிலாளர்கள் சிக்கி தவித்து வந்த நிலையில், இது குறித்து தகவல் கிடைத்ததும், கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலமாக போராடி தீயை அணைத்தனர். மேலும் தீக்குச்சி குடோனில் சிக்கியிருந்த துரைசாமிபுரத்தை சேர்ந்த கணேசன் (47), சிவகாசி, பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்த சுடலை முத்து (42) ஆகிய இரண்டு தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில், விஜயாபுரியைச் சேர்ந்த பீட்டர் கார்த்திக் (27) என்ற தொழிலாளி, உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தீ விபத்தில் குடோன் மற்றும் அதன் முன்பிருந்த வாகனமும், முற்றிலுமாக தீயில் எரிந்து சேதமானது. வாகனத்தில் இருந்து குச்சியை குடோனுக்குள் ஏற்றிக் கொண்டிருந்த போது தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து ஆலையின் உரிமையாளர் முருகன் மீது நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல்லையை மிரளவைத்த இரட்டை கொலை - கஞ்சா போதையில் அப்பாவி மக்களை ஓட ஓட வெட்டிய கும்பல்

தொழிலாளர் பீட்டர் கார்த்திக்கிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சிவகாசி பேர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுடலைமுத்து (42), துரைசாமிபுரத்தைச் சேர்ந்த கணேசன்(47) இருவரும் தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனால் தீக்குச்சி குடோன் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.