'திக் திக்' பணிகளில் 8 ஆண்டுகள் சேவை... சென்னை ஏர்போர்ட் பாதுகாப்பு பிரிவில் இருந்து 3 மோப்ப நாய்கள் ஓய்வு!
மூன்று மோப்ப நாய்கள் ஓய்வு பெற்றதை அடுத்து புதிதாக மூன்று மோப்ப நாய்கள் பாதுகாப்பு பிரிவில் இணைந்துள்ளன.

Published : March 2, 2026 at 7:26 PM IST
சென்னை: விமான நிலையத்தில் 8 ஆண்டுகளாக சோதனை பணிகளில் திறம்பட செயல்பட்டு வந்த மூன்று மோப்ப நாய்கள் இன்றுடன் ஓய்வு பெற்றன.
சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் விமான நிலையத்தில் வெடிகுண்டு, வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை விரைந்து கண்டறிய மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை விமான நிலைய மோப்ப நாய் பிரிவில் மொத்தம் ஒன்பது மோப்ப நாய்கள் பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் திறம்பட பணியாற்றி வந்த கோல்டன் ரெட் ரீவர் வகையைச் சேர்ந்த 'ஆஷா' என்ற பெண் மோப்ப நாய், லாப்ரடார் வகையைச் சார்ந்த 'ஸ்வீட்டி' என்ற பெண் மோப்ப நாய், காக்கர் ஸ்பேனியல் வகையைச் சேர்ந்த 'மேக்ஸ்' என்ற ஆண் மோப்ப நாய் ஆகிய மூன்றும் இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெற்றன.
இந்த நிலையில், சென்னை பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் மூன்று மோப்ப நாய்களுக்கும் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற மூன்று மோப்ப நாய்களுக்கும் பதக்கம் மற்றும் மாலைகள் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி பொன்னி, சென்னை விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு மூன்று மோப்ப நாய்களையும் கௌரவித்தனர். மேலும், மூன்று மோப்ப நாய்களுக்கும் கேக் வெட்டி, சிவப்பு கம்பளம் விரித்து, மலர் தூவி வழி அனுப்பி வைத்தனர்.
மோப்ப நாய்களின் சேவை
ஓய்வு பெற்ற ஆஷா என்ற மோப்ப நாய் சென்னை விமான நிலையத்தில் 10,216 கவனிப்பின்றி விடப்பட்ட பொருட்களை சோதனை செய்ததுடன், 1,048 வாகனங்கள் மற்றும் 1,248 முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு சோதனைகளில் ஈடுபட்டுள்ளது.
ஸ்வீட்டி என்ற மோப்ப நாய் 8,704 கேட்பாரற்று கிடந்த பொருட்களை பரிசோதித்ததுடன், 1,880 வாகனங்கள் மற்றும் 1,360 முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு சோதனைகளில் பங்கேற்றுள்ளது.
மேக்ஸ் என்ற மோப்ப நாய் 8,568 பொருட்கள், 1,264 வாகனங்கள் மற்றும் 1,064 முக்கிய பிரமுகர் பாதுகாப்பு சோதனைகளில் ஈடுபட்டு, வெடிகுண்டு அச்சுறுத்தல் நிலைகளில் தனிமைப்படுத்தப்பட்ட விமானங்களை பரிசோதிக்கும் பணியில் முக்கிய பங்காற்றியுள்ளது.

புதிய மோப்ப நாய்கள் சேர்ப்பு
இந்த நிலையில் மூன்று மோப்ப நாய்கள் ஓய்வு பெற்றதை அடுத்து புதிதாக ராஞ்சியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மோப்ப நாய்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மூன்று மோப்ப நாய்கள் பணியில் சேர்க்கப்பட்டன. அதன்படி, லாப்ரடார் வகையைச் சேர்ந்த காண்டி என்ற பெண் மோப்ப நாய், பாந்தர் என்ற ஆண் மோப்ப நாய், காக்கர் ஸ்பேனியல் வகையைச் சேர்ந்த ஆண் மோப்ப நாய் ஆகிய மூன்றும் அதிகாரப்பூர்வமாக சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்டன.
இன்று இந்த மூன்று மோப்ப நாய்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த மூன்று மோப்ப நாய்களுக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ராஞ்சியில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த மூன்று நாய்களும் சோதனை முறையில் நடந்த நிகழ்வில், போதை பொருட்கள் அடங்கிய டப்பாக்களை துல்லியமாக கண்டுபிடித்து அசத்தின. மேலும், இவை வெடி பொருட்கள் கண்டறிதல், போதை பொருட்கள் கண்டறிதல், தீவிர வாகன சோதனை, பயணிகளின் உடமைகள் உள்ளிட்டவற்றை சோதனையிடுவதில் பயிற்சி பெற்றுள்ளன. குறிப்பாக, இவை வெடி மருந்துகளை துல்லியமாக கண்டுபிடிக்கும் என்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

