சோலைவனமாக மாறிய குப்பை கிடங்கு... தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய முன்னெடுப்பு
பாலைவனத்தையும் பக்குவப்படுத்தி பயன்படுத்தினால் சோலைவனமாக ஆக்கி விடலாம் என்பதற்கு தூத்துக்குடி மாநகராட்சி குப்பை கிடங்கே ஒரு சாட்சியாக உள்ளது.

Published : January 4, 2026 at 5:10 PM IST
-By எம்.மணிகண்டன்
“குப்பைக் கிடங்கு அமைந்துள்ள 526 ஏக்கர் பரப்பளவு முழுவதும் மரங்களை நடவு செய்து, தூத்துக்குடியை மாசு இல்லாத மாவட்டமாக மாற்றுவதே எங்களது இலக்கு” - மேயர் ஜெகன் பெரியசாமி
கொத்துக் கொத்தாய் காய்கனிகள், சரம் சரமாய் புளியங்காய் என கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை போர்வை போர்த்தியது போல காணப்படும் இந்த இடம் தனியார் தோட்டமோ, ரிசார்ட்டோ கிடையாது. தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட குப்பைமேடு. பார்ப்போரை இது குப்பைக் கிடங்கா? அல்லது சோலைவனமா? என்று வியக்க வைத்துள்ளது தூத்துக்குடி மாநகராட்சியின் முன்னெடுப்பு. இதுகுறித்த செய்தி தொகுப்பைக் காணலாம்.
உலகில் மக்கள்தொகை பெருகி வருவது போல நாளுக்கு நாள், அவர்கள் பயன்படுத்தும் குப்பைகளும் அதிகரித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் குப்பை தான். ஆறு, கடல் உள்ளிட்ட நீர் நிலைகள், சில சமயத்தில் சாலை ஓரங்கள் என பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் குப்பையை எங்கெல்லாம் போடலாம் என்று உட்காந்து சிந்திப்பார்கள் போல. இதனால், கடலில் மீன்களுக்குப் பதில் குப்பைகள் மிதக்கிறது, வீடு கட்ட குழி தோண்டினால் சிலருக்கு புதையல் கிடைக்கும், நமக்கோ கூடை கூடையாக பிளாஸ்டிக் பைகள் தான் கிடைக்கிறது.
கழிவுகளை முறையாகப் பிரித்து மறுசுழற்சி செய்யாததும், குப்பைகளை எங்கு வேண்டுமானாலும் கொட்டுவதும் தான் குப்பை மலை போல குவியக் முக்கிய காரணம். இதனால் நிலம், நீர்நிலைகள், காற்று என்று பூமி மொத்தமாக மாசடைந்து வருகிறது. குறிப்பாக, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீர்குலைவு மற்றும் மனிதக் குலத்திற்கே ஆபத்தை உருவாக்குகிறது.
சோலைவனமாக மாறிய குப்பைமேடு
இந்நிலையில், தூத்துக்குடி-ராமநாதபுரம் சாலையில் தருவைகுளம் அருகே அய்யனார்புரம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 526 ஏக்கர் பரப்பளவிலான குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இதனை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சராக இருந்தபோது தொடங்கி வைத்தார். இந்த குப்பை கிடங்கு அடிக்கடி தீப்பற்றிக் கொள்வதால், அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது வாடிக்கையாகி வந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2 ஏக்கர் பரப்பளவில் பயோ மைனிங் (கழிவுகளிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுக்கும் ஒரு தொழில்நுட்பம்) மூலம் குப்பைகளை பிரித்தும், 2,000 மரக்கன்றுகளை நடவு செய்தும் வருகின்றனர் மாநாகராட்சி அதிகாரிகள். அதனை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் மூலம் முறையாக பராமரித்தும் வருகின்றனர். இதுமட்டுமின்றி, தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து வெளியேற்றப்படக்கூடிய கழிவுநீர் தான், அங்குள்ள மரக்கன்றுகளுக்கு நீராதாரமாக விளங்குகிறது என்பதுதான் இதன் தனிச் சிறப்பு.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை பார்வையிட ஈடிவி பாரத் ஊடகம் சார்பில் புறப்பட்டோம். அங்கு சென்றபோது, நுழைவாயிலிலேயே குப்பை எதுவும் இல்லாமல் சுத்தமாக வைத்திருந்தனர். பொதுவாக காட்டுக்குள் கூட குப்பையைப் பார்க்க முடியும். ஆனால், குப்பைக் கிடங்கை இவ்வளவு பராமரிக்க முடியுமா? என்பது ஆச்சரியத்தை ஊட்டியது. ஏனென்றால் மலை போல சேமிக்கப்பட்ட குப்பைகளை, இப்படி பசுமைசோலையாக மாற்றியுள்ளார்கள். தொடர்ந்து உள்ளே சென்றபோது, அங்கிருந்த மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வரும் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணி மற்றும் பராமரிப்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்படியே அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.
சிறந்த சுற்றுலா தலம்

அப்போது நம்மிடம் பேசிய மாநகராட்சி ஊழியர்கள், “இங்கு பெரும்பாலும் மல்பீரியன், அத்தி, மா, கொய்யா, ஒட்டுப்பழம், கொடுக்காப்புளி போன்ற மரங்கள் அணிவகுத்து நிற்கிறது. அதுமட்டுமின்றி, அந்த மரங்களில் கொத்துக் கொத்தாக காய், கனிகளும் காய்த்துத் தொங்குகிறது. அதனை பார்க்கும்போதே மனதிற்கு உற்சாகம் ஏற்படுகிறது. வெயில் காலங்களில் பறவைகள் மற்றும் விலங்குகளின் புகலிடமாகவும் இந்த காடு மாறியுள்ளது. அவ்வப்போது புள்ளி மான்களும் துள்ளிக் குதித்து ஓடும். இதுமட்டுமின்றி, 100 ஏக்கர் பரப்பளவில் மரங்களை நடவு செய்வதற்கு தேவையான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது” என தெரிவித்தனர்.
தொடர்ந்து மாநகராட்சி ஊழியர் அந்தோணி ராஜ் கூறியதாவது, “முள் காடுகளாக இருந்தவற்றை எல்லாம் அழித்துவிட்டு, அந்த இடத்தில் பழம், நிழல் தரும் மரங்களை நட்டு வைத்து ஒரு தோப்பாக உருவாகியுள்ளோம். சுற்றுலாத்தலம் என்று எங்கெங்கோ செல்வதற்கு பதிலாக, இங்கு வந்து பார்வையிடலாம். அந்த அளவிற்கு இயற்கை செழிப்போடு, நிறைய மருத்துவ குணங்கள் கொண்ட மரங்களையும், செடிகளையும் வைத்துள்ளோம். உள்ளே வந்தால், சுற்றிப் பார்க்கவே 2 நாட்கள் தேவை. அவ்வளவு பெரிய காடாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மேயர் ஜெகன் உள்ளிட்டோர்கள் தான்” என்றார்.

| இதையும் படிங்க: 'எங்க ஊரு கயிறு இல்லாம ஜல்லிக்கட்டு இல்லப்பே' - மதுரையில் களைகட்டிய மூக்கணாங்கயிறு விற்பனை! |
மாசில்லா மாவட்டம்
இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமியை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இந்த பகுதி வாகை, புங்கை, வேம்பு, தேக்கு உள்ளிட்ட 300 வகையான மரங்களால் அடர்ந்த வனம் போலக் காட்சியளிக்கிறது. மேலும், தூத்துக்குடி - ராமநாதபுரம் சாலையிலிருந்து கடற்கரை வரை சுமார் 3 கி.மீ தூரத்திற்கு மரங்களை நட்டு, அந்த வழியாக வரக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு சுற்றுலாத் தலம் போல் உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தூத்துக்குடியில் அமைந்துள்ள பூங்காக்கள் மட்டுமல்லாமல் குப்பைக் கிடங்கு அமைந்துள்ள 526 ஏக்கர் பரப்பளவு முழுவதும் மரங்களை நடவு செய்து, மாசு இல்லாத மாவட்டமாகவும், பசுமையான அடர்ந்த காடு போல் மாற்றுவதே மாநகராட்சியின் இலக்கு” எனத் தெரிவித்தார்.
யாராவது இந்த பகுதியை பார்த்தால் இது குப்பைக் கிடங்கா? அடர்ந்த வனமா? என்ற சந்தேகத்தை உருவாக்கும் வகையில், சுமார் 300 வகையான மரங்களும், செடிகளும் வளர்ந்து கிடக்கிறது. அதனால், இப்பகுதியே பசுமை சோலையாக மாற்றியுள்ளது என்றால் மிகையாகாது. மேலும், பாலைவனத்தையும் பக்குவப்படுத்தி பயன்படுத்தினால் சோலைவனமாக மாற்றலாம் என்பதற்கு தூத்துக்குடி மாநகராட்சி குப்பைக் கிடங்கே ஒரு சாட்சி!

