திருவள்ளூர் தொழிற்சாலையில் அம்மோனியா அகற்றும் பணிகள் தீவிரம் - தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கம்
அம்மோனியாவை அகற்றும் வரை கிராம மக்கள் 300 மீட்டர் முதல் 500 மீட்டர் சுற்றளவு வரை தொழிற்சாலைக்கு அருகே வராமல் விலகி இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Published : July 4, 2026 at 12:07 PM IST
திருவள்ளூர்: அம்மோனியா வாயு கசிவால் 18 பேர் உயிரிழந்த நிலையில், தொழிற்சாலையில் மீதமுள்ள அம்மோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்றும் பணி இன்று நடைபெறுகிறது. இதனால் தொழிற்சாலையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகேயுள்ள கன்னிகை பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் கடல் உணவுகள் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த ஜூன் 21ஆம் தேதி அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு, 18 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விபத்து நடந்து 14 நாட்கள் கழித்து அந்த நிறுவன வளாகத்தில் இருந்து மீதமுள்ள 2000 லிட்டர் அம்மோனியா வாயுவை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சவாலான பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தமிழக தீயணைப்பு படை வீரர்கள், காவல் துறையினர் என பல்வேறு துறை சார்ந்தோர் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணிக்கான முன்னெடுப்பு மாதிரி ஒத்திகை நேற்று நடைபெற்ற நிலையில், இன்று வாயுவை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் அந்த கிராம மக்கள் 300 மீட்டர் முதல் 500 மீட்டர் சுற்றளவு வரை தொழிற்சாலைக்கு அருகே வராமல் விலகி இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அம்மோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்றுவது குறித்தும், அகற்றப்படும் வாயுவை பாதுகாப்பாக எடுத்துச் செல்வது குறித்தும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா, வருவாய்த்துறை, மருத்துவ குழு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரிகளுடன் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கவிதா, “மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். தொழிற்சாலையில் உள்ள அம்மோனியாவை பாதுகாப்போடு வெளியே எடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவ குழு, காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோருடன் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரிய துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொழிற்சாலையில் உள்ள அம்மோனியா மேலும் பரவாமல் தடுக்க அவற்றை முழுவதுமாக அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன.
அம்மோனியா வாயு முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை#AmmoniaGasLeak | #thiruvallur | #collectorkavithabyte | #gasleak | #EtvBharatTamilNadu pic.twitter.com/dZ90FPgmZa
— ETV Bharat Tamil Nadu (@ETVBharatTN) July 4, 2026
மாலை 5 மணி வரை இந்த நிகழ்வானது நடைபெறும். 5 மணிக்குள் அம்மோனியாவை அகற்றாவிட்டால் இந்த பணி நாளையும் தொடரும். இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிலையில், தொழிற்சாலை அருகிலுள்ள தனியார் நிறுவனங்கள், குடோன்கள், அங்கன்வாடி மையம், அரசுப் பள்ளி ஆகியவற்றிற்கு இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. காலை 8 மணிக்கு துவங்கிய இந்த பணிகள் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த பணியின் நிமித்தமாக தொழிற்சாலையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.
| இதையும் படிங்க: போடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை - கணக்கில் வராத சுமார் 2 லட்ச ரூபாய் பறிமுதல் |
தற்போது தொழிற்சாலையில் அம்மோனியா வாயு எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது திடீரென வாயு கசிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் வாயு எடுக்கும்போது இதுபோன்ற வாசனை வருவது சகஜம் தான் என்று தொழிற்சாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

