திமுகவுடன் பேரம் பேசும் கட்சியாக விசிக இல்லை - திருமாவளவன் பேட்டி
புதுச்சேரியிலும் ஒரு பொது தொகுதி, 2 தனி தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

Published : March 2, 2026 at 1:30 PM IST
சென்னை: நாங்கள் திமுகவோடு பேரம் பேசும் கட்சியாக ஒருபோதும் இருந்தது இல்லை என திருமாவளவன் கூறினார்.
சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அந்த வகையில், திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீட்டு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, விசிக பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார் எம்பி, சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ”திமுகவுடன் இன்று தொகுதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல், வழக்கமான சராசரியான பொது தேர்தல் அல்ல. இந்த தேர்தலில் வலதுசாரி சக்திகளை காலூன்ற விடாமல் தடுப்பது என்ற பொறுப்புணர்வோடு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை நூறு விழுக்காடு உறுதிப்படுத்த வேண்டும் என்ற அக்கறையோடு, இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறது. அந்த வகையில் உரிமை உணர்வோடு, எங்கள் கருத்துக்களை இந்த கூட்டத்தின் வாயிலாக பகிர்ந்து கொண்டோம்.
நாங்கள் திமுகவோடு பேரம் பேசும் கட்சி இல்லை. இந்த கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கான வெற்றி - சமூகநீதி அரசியலுக்கான வெற்றி என்ற புரிதலோடு எங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து, எங்கள் கருத்துக்களை மனம் உவந்து கேட்டுக் கொண்டார்கள்.
பேச்சுவார்த்தை சுமூகமாக, சிறப்பான முறையில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் எந்த தொய்வும் இல்லை. எந்தெந்த தொகுதிகள் என்று நாங்கள் பேசவில்லை. எங்களுக்கான அதிகார பகிர்வு என்பது, எங்கள் வலிமை, பங்களிப்புக்கு ஏற்ப அமைய வேண்டும் என்பதை தெளிவுபடுத்தினோம். புதுச்சேரியிலும் ஒரு பொது தொகுதி, 2 தனி தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே உள்ள ரகசியங்களை வெளியே சொல்ல முடியாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மோடி வித்தை எடுபடாது. மோடி எவ்வளவு முறை தமிழ்நாடு வந்து, திமுகவுக்கு எதிரான களங்கத்தை பூச நினைத்தாலும் தமிழ்நாட்டு அரசியலில் அது ஈடுபடாது. தமிழ்நாடு மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டது.
இங்கு மதவாத, சாதியவாத அரசியலுக்கு இடமில்லை. வெறுப்பு அரசியலை எப்போதும் நம் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டில் இன்றும் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஆனால் அரசியல் சூழல் அதற்கு ஏற்றார்போல் தற்போது இல்லை. எங்களது தொகுதி எண்ணிக்கையைத் தான் அதிகார பகிர்வு என்ற பெயரில் கேட்டுள்ளோம்” என்றார்.

