ETV Bharat / state

‘பழம் நழுவி பாலில் விழுந்த கதை தான் கூட்டணி ஆட்சி’ - கருணாநிதி பாணியில் கதை சொன்ன வி.சி.க திருமாவளவன்

கடந்த 37 ஆண்டுகால கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தின் விளைவாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்றைக்கு மாநிலக் கட்சி என்கிற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என திருமாவளவன் தெரிவித்தார்.

திண்டிவனத்தில் திருமாவளவன் பேச்சு
திண்டிவனத்தில் திருமாவளவன் பேச்சு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : October 12, 2026 at 11:02 AM IST

2 Min Read
Choose ETV Bharat

விழுப்புரம்: பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக கூட்டணி அரசு உருவாகி சிறுத்தைகளின் மடியிலே வந்து விழுந்திருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறார்.

திண்டிவனத்தில் வி.சி.க சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழ்நாடு முழுவதுமிருந்து பலர் பங்கேற்றனர். இதற்காக, ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மூன்று மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் நேரடியாகப் பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.

இம்மாநாட்டில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், “இம்மாநாட்டில் 'ஜென்சி' (Gen Z) என்று அழைக்கப்படும் புதிய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் பேரணியாகவும் அணி திரண்டும் பெருமளவில் பங்கேற்றது அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

மாநாட்டில் விரிவாக உரையாற்ற 125 முக்கியத் தீர்மானங்களை வாசிப்பதற்கும் திட்டமிட்டு இருந்தேன். ஆனால் 234 மாவட்டச் செயலாளர்கள், 39 மண்டலச் செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் என கிட்டத்தட்ட 400 பேருக்கு மேடையில் இடமளிக்கப் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டது தான் நான் செய்த தவறு” என்று கூறினார்.

தொடர்ந்து கூட்டணி குறித்து பேசிய அவர், “காலம் சில நேரங்களில் கணக்கு போடும். ‘காகம் உட்கார்ந்து பனம் பழம் விழுந்த கதை’யை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், ஏற்கனவே காய் பழுத்து பழமாகி காம்பிலிருந்து விழக்கூடிய நிலையில் இருந்திருக்கும்.

அந்த நேரம் பார்த்து காகம் ஒன்று உட்கார்ந்ததும் பனம் பழம் விழுந்துவிட்டதாக கூறுவார்கள். காகம் அங்கு உட்காந்ததன் நோக்கம் அது இல்லை. பழத்தை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணமும், சதி திட்டமும் காகத்திற்கு இல்லை.

ஆனால், பார்ப்பவர்கள் கண்ணுக்கு காகம் உட்கார்ந்ததால் தான் பழம் விழுந்த தோற்றம் இருக்கும். இது காகம் போட்ட கணக்கு அல்ல; காலம் போட்ட கணக்கு. அதுபோல, தமிழ்நாட்டில் ஒரு கூட்டணி அரசு உருவாகும். அதற்கான காலம் கனியும் என்று நான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன். காலம் கனிந்தது, கூட்டணி அரசு உருவானது, விடுதலை சிறுத்தைகள் அமைச்சரவையில் இடம் பெற்றுவிட்டது.

நாங்களாக இதை உருவாக்கவில்லை. முன்கூட்டியே கணக்கு போடவில்லை. நாங்களே அமைச்சரவையில் சேருகிறோம் என்று கேட்கவில்லை. தூது அனுப்பவில்லை, பேரம் பேசவில்லை. பழம் நழுவி பாலிலே விழுந்த கதையாக கூட்டணி அரசு உருவாகி சிறுத்தைகளின் மடியிலே வந்து விழுந்திருக்கிறது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: அமைச்சர் பதவி போனாலும் பரவாயில்லை; பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் - அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்

மேலும், மற்ற அரசியல் தலைவர்களை விடத் தாம் தினமும் 20 மணி நேரத்திற்கும் மேலாக உழைக்க வேண்டிய சூழல் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த 37 ஆண்டுகால கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தின் விளைவாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்றைக்கு மாநிலக் கட்சி என்கிற அங்கீகாரத்தைப் பெற்று, மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க இயக்கமாக உயர்ந்துள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.