ETV Bharat / state

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கைவரிசை காட்டிய சரித்திர பதிவேடு ரவுடி - 30 சவரன் நகைகள், ரொக்கம் குறித்து விசாரணை

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி போதை மயக்கத்தில் இருப்பதால், சுய நினைவிற்கு வந்த பிறகே திருடிச்சென்ற நகைகள் குறித்து தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகை மற்றும் பணம் திருட்டுபோன வீடு
நகை மற்றும் பணம் திருட்டுபோன வீடு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 8:17 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: கோடம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.80 லட்சம் பணம் மற்றும் 30 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கோடம்பாக்கம் சுப்பிரமணி நகர் 2வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் வசித்து வருபவர் பாஸ்கர் (52). இவர் மணலியில் உள்ள ஸ்ரீராம் பைபர்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற தனது தங்கை வீட்டு திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக பாஸ்கர் தனது குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றார்.

மறுநாள் 30ஆம் தேதி பாஸ்கர் வீட்டு பூட்டு உடைந்து இருப்பதை பார்த்த சக குடியிருப்புவாசிகள் இதுகுறித்து அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாஸ்கர் உடனடியாக அசோக் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அடையாளம் தெரியாத நபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகள், 1.80 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் போலீசார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

கோடம்பாக்கம் காமராஜர் காலனியை சேர்ந்த ரவுடியும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான சுரேஷ் என்கிற மார்கெட் சுரேஷின் (49) வீட்டிற்குச் சென்றபோது அந்த நபர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

இதையும் படிங்க: ஆகஸ்ட் மாதத்தில் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை - கணக்கில் வராத ரூ.1.21 கோடி ரொக்கம் பறிமுதல்

இதனையடுத்து போலீசார் ரவுடி சுரேஷை வலைவீசி தேடிவந்த நிலையில் அவர் வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியில் மறைந்து இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் வேலூர் விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த சுரேஷை நேற்று (செப்டம்பர் 1) இரவு கைது செய்து சென்னை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், சுரேஷ் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்துவதில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய போதை தெளிந்த பிறகே, விசாரணை நடத்தி, கொள்ளையடித்த பொருட்களை பறிமுதல் செய்யமுடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.