வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூர கொலை - சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்
அமுதாவை கொலை செய்து விட்டு அவரது வீட்டின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்த போது கொலையாளிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Published : January 9, 2026 at 6:31 PM IST
சென்னை: சூளைமேடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த டீ கடைக்காரர் மனைவியை கத்தியால் குத்தி, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற நபரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு விநாயகபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (50). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அமுதா (45). நேற்று (ஜன.8) வழக்கம் போல சீனிவாசன் கடைக்கு சென்ற பின் அமுதா மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் அமுதா வீட்டில் இருந்து அலறல் சத்தம் வருவதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து உள்ளனர். அப்போது அமுதா உடலில் ரத்த காயத்துடன் உடலில் சில பகுதிகள் எரிந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சூளேமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்த போலீசார் அமுதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் அதே பகுதியில் ஜூஸ் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த சாந்த குமார் என்பது தெரிந்தது. இவர் அமுதா கடைக்கு போய் விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்ததை நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார். பின்னர் அமுதா வீட்டிற்குள் செல்வதற்காக கதவை திறந்த போது, பின் தொடர்ந்து வந்த சாந்த குமார், அவரை வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டியுள்ளார். அதனை தொடர்ந்து கத்தியால் அமுதாவை குத்திவிட்டு, அவர் காதில் அணிந்திருந்த தங்க கம்மல், தங்கச் செயின் ஆகியவற்றை பறித்துள்ளார்.
மேலும், ரத்த வெள்ளத்தில் சரிந்த அமுதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, சாந்தகுமார் ஜூஸ் பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை அமுதா மீது ஊற்றி எரித்துக் கொன்றுள்ளார். அதன் பின்னர் சாந்தகுமார் அங்கிருந்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், அமுதாவை கொலை செய்து விட்டு அவரது வீட்டில் 2வது மாடியில் இருந்து கீழே குதித்த போது சாந்தகுமாருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும், அவரை தற்போது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கொலை சம்பவத்தில் சாந்தகுமார் மட்டும் ஈடுபட்டாரா? அல்லது அவருடன் வேறு யாராவது இருந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

