ETV Bharat / state

திமுக கூட்டணியில் முடிவுக்கு வருமா இழுபறி? மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் 'திடீர்' சந்திப்பு

டெல்லி தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை இருவரும் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினர்.

கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு
கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 3, 2026 at 2:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று சந்தித்தார்.

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கியது.

ஏற்கனவே மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. தொடர்ந்து, மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி என பல்வேறு கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது.

இந்த கட்சிகள் எல்லாமே தங்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை திமுக தொகுதி பங்கீடு குழுவிடம் கூறியுள்ளதாகவும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் எனவும் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.

மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் கூட குறைய இருந்தாலும் திமுகவுடன் கூட்டணியில் நீடிக்கும் என்றாலும், காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையிலும் திமுகவுடன் இணைந்து இந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இதுவரை இருந்து வருகிறது.

ஏனெனில் காங்கிரஸ் கட்சி தான் முதன்முதலில் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அமைத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே முதலமைச்சரை சந்தித்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் திமுகவிடம் அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் கேட்டு பெற வேண்டும் இல்லையென்றால் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினர்.

திமுக தொகுதி பங்கீட்டு குழு
திமுக தொகுதி பங்கீட்டு குழு (ETV Bharat Tamil Nadu)

இதன் காரணமாக திமுக - காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களிடையே வார்த்தை மோதல்கள் வெடித்தன. அதனைத் தொடர்ந்து கூட்டணி உறுதியாக உள்ளது என செல்வப்பெருந்தகை கூறி வந்தாலும் இன்னும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனிடையே திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த மாதம் 28 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதையும் படிங்க: அடிப்படை வசதி செய்து தராததால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர்

இந்த பேச்சுவார்த்தையில் தொகுதிகளின் எண்ணிக்கை, ஆட்சியில் அதிகாரம் என காங்கிரஸ் கட்சியின் அனைத்து விருப்பங்களும் தெரிவிக்கப்பட்டதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்திருந்தார். மேலும் செல்வப்பெருந்தகை, மாநிலங்களவையில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு தருவதாக முதல்வர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த சூழலில் தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக தொகுதி பங்கீடு குழு கடந்த முறை ஒதுக்கப்பட்ட அதே 25 இடங்களை தருவதற்கு தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் காங்கிரஸ் தரப்பிலோ 40 அல்லது 35 தொகுதிகளாவது எதிர்பார்ப்பதாகவும், இல்லையென்றால் கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கு தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் தர முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்த நிலையில், மார்ச் 5 ஆம் தேதியுடன் மாநிலங்களவைக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. அப்படியானால் இந்த தேதிக்குள்ளாக காங்கிரஸ் - திமுக இடையே சட்டமன்ற தொகுதி உடன்பாடு எட்டப்பட்டால் தான் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் டெல்லி தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இருவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினர். கனிமொழி எம்.பியும் பேச்சுவார்த்தையின் போது உடனிருந்தார். அப்போது, 21 முதல் 25 தொகுதிகள் அளிப்பதாக திமுக திட்டவட்டமாக கூறியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.