ETV Bharat / state

தமிழ்நாடு சட்டமன்றம் 23-ஆம் புலிகேசி படம் போல் உள்ளது - டிடிவி தினகரன் விமர்சனம்

ரீல்ஸ் போட்டு மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தவர் முதலமைச்சர் விஜய் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு
டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 1, 2026 at 6:59 PM IST

2 Min Read
Choose ETV Bharat

திருநெல்வேலி: தமிழ்நாடு சட்டமன்றம் 23-ஆம் புலிகேசி படம் போல் உள்ளது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் விமர்சித்துள்ளார்.

திருநெல்வேலியில் உள்ள தனியார் ஹோட்டலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “தமிழ்நாடு மக்கள் கடந்த திமுக ஆட்சியில் இருந்து மாற்றம் வேண்டும் என்று நினைத்து தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியில் அமர வைத்தார்கள்.

வேலியில் போனா ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டது போல் ஆகிவிட்டது. 100 நாள் ஆகிவிட்டது, எதிர்த்துப் பேசுவதில்லை, கைது செய்வதை தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை, இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் போட்டு மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தவர்கள், ரீல் விட்டு ஆட்சியை தொடர பார்க்கிறார்கள். சட்ட ஒழுங்கு மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

கடந்த ஆட்சியில் எதற்கெல்லாம் குறையாக கூறினோமோ, அதெல்லாம் அளவுக்கு அதிகமாக எந்த கட்டுப்பாடு இல்லாமல் இந்த ஆட்சியில் இருக்கிறது. ஊழல் இல்லை, லஞ்சம் இல்லை என கூறுகிறார்கள். ஆனால், அது உண்மையா என்று தெரியவில்லை. உறுதியாக இந்த ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள்.

அ.தி.மு.க. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நாங்கள் இருவரும் ஒரே அணியில் தான் இருக்கிறோம். பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இருக்கிறோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், அ.தி.மு.க.வும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கட்சி. இரண்டு கட்சியும் வழி நடத்துபவர்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் தான். ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதற்கு அ.தி.மு.க.வுடன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுதியாக செயல்படும்.

இடைத்தேர்தல் குறித்து நாம் பேசுவதற்கு முன்னால் இடைத்தேர்தல் தமிழ்நாட்டில் நடக்க வேண்டும். அது நடத்தால் அதைப்பற்றி பேசலாம். தமிழ்நாட்டில் தற்போது சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. ஆனால், சட்டப்பேரவை 23-ஆம் புலிகேசி படத்தைப்போல உள்ளது. சட்டமன்றத்தில் 23-ஆம் புலிகேசி வந்து அமர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் உள்ளன.

தமிழ்நாட்டு மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 இடங்களை தான் கொடுத்திருக்கிறார்கள். அருதி பெரும்பான்மையை கொடுக்கவில்லை. 126 தொகுதிகள் எதிர்க்கட்சியினர் தான் இருக்கிறார்கள். ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் அங்கு சென்றுள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இன்று அவதிப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: “மறுபிறவி எடுத்து வந்துள்ளோம்... நான்கு நாட்களில் தப்பித்தோம்” - நேபாள வெள்ளத்தில் இருந்து மீட்டு வந்த தமிழர்கள் திகில் பேட்டி

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், த.வெ.க. அரசிற்கு ஆதரவாக அதிகமாக பேசினார். இன்று அவருடைய அமைச்சர்களையே ராஜினாமா செய்துவிடுவோம் என சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் அமைதி காக்கின்றார். தமிழ்நாட்டு மக்களை ரீல்ஸ் போட்டு ஏமாற்றியது போல், வட நாட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என நினைக்கிறார்.

நேபாளத்திற்கு 25 கோடி கொடுத்ததாக ரிலீஸ் போடுகிறார்கள். ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக வருவதற்காகவே த.வெ.க. முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. இவர்களுக்கு வலிய சென்று ஆதரவு கொடுத்த மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவின் சக்கரவர்த்தி தான் ராகுல் காந்திக்கு பதில் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.