'மாஞ்சோலை தொழிலாளர்கள் 722 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் மிஸ்சிங்' - மீண்டும் நடந்த தவறு; தீர்வு என்ன?
800 பேரின் வீடுகளை பிஎல்ஓக்கள் ஆய்வு செய்த போது 78 பேர் மட்டுமே மலைப்பகுதியில் குடியிருந்தது தெரியவந்தது.

Published : February 25, 2026 at 10:51 PM IST
BY: இரா. மணிகண்டன்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய மாஞ்சோலை தொழிலாளர்கள் 722 பேரின் பெயர் தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் ''மிஸ்'' ஆகி உள்ளது. மீண்டும் நடந்த தவறுக்கு என்ன தான் தீர்வு? என்பது குறித்த சிறப்பு தொகுப்பை பார்ப்போம்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாஞ்சோலை ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி ஆகிய மலைக் கிராமங்களில் செயல்பட்டு வந்த பிபிடிசி தனியார் தேயிலைத் தோட்டம் அதன் குத்தகை 2028ல் முடிவடைவதால் முன்கூட்டியே தேயிலை உற்பத்தியை நிறுத்தியது. இதனால் சுமார் 500 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இருப்பினும் அங்கேயே வாழ்வாதாரம் கோரி தொழிலாளர்கள் கீழே இறங்க மறுத்தனர். எனவே நிறுவனம் சார்பில் கட்டாய விருப்ப ஓய்வு வழங்கி அதற்கான பண பலன்களும் வழங்கப்பட்டது. ஆனால் சுமார் 120 தொழிலாளர்கள் மட்டுமே விருப்ப ஓய்வில் கையெழுத்துட்டு பண பலன்களை பெற்றனர்.
சுமார் 300க்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வில் கையெழுத்திடாமல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அரசின் வீடு உள்பட உதவிகளை பெற்றுக்கொண்டு சுமார் 150 குடும்பத்தினர் கீழே குடி பெயர்ந்துவிட்டனர். அதே சமயம் தங்களுக்கு சாதகமாக ஏதாவது உத்தரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுமார் 320 குடும்பத்தினர் விருப்ப ஓய்வில் கையெழுத்திடாமல் குடியிருப்புகளையும் காலி செய்யாமல் உள்ளனர்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் முன்பு 1906 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்தனர். இதில் வீடு வாங்கி விட்டு குடி பெயர்ந்தவர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் பல்வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.
இதனால் எஸ்ஐஆர் பணியின் போது 800 பேரிடம் SIR விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பலர் விண்ணப்பம் வழங்கவில்லை. 800 பேரின் வீடுகளை பிஎல்ஓக்கள் ஆய்வு செய்த போது 78 பேர் மட்டுமே மலைப்பகுதியில் குடியிருந்துள்ளனர். எனவே மீதமுள்ளவர்கள் மேல வசிக்கவில்லை என தீர்மானித்ததால் SIR வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 722 பேரின் பெயர் இடம் பெறவில்லை. அவர்கள் கீழே குடிபெயர்ந்து விட்டதால் படிவம் 6ஐ நிரப்பி கொடுத்து அதில் கீழே உள்ள முகவரியில் வாக்குரிமை பெற்றுக்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் படிவம் 6-லிலும் மாஞ்சோலை முகவரியை மக்கள் குறிப்பிட்டனர். எனவே அவர்களுக்கு வாக்குரிமை கிடைக்குமா? கிடைக்காதா என்ற கேள்வி எழுந்தது.
இது போன்ற சூழ்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் வெறும் 78 பேரின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதன்படி மாஞ்சோலையில் 35 பேர், நாலுமுக்குவில் 33 பேர், ஊத்துவில் 10 பேர் என மொத்தம் 78 வாக்காளர்கள் தான் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் 800 பேரில் 722 பேருக்கு இந்த தேர்தலில் வாக்குரிமை கிடைக்கவில்லை. ஏற்கனவே மாஞ்சோலை நாலுமுக்கு ஊத்து பகுதியில் இருந்த 5 வாக்கு சாவடிகளில் 2 வாக்குச்சாவடிகளை அரசு மூடிவிட்டது. இதன் காரணமாக தற்போது 2 வாக்குச்சாவடிகள் மட்டுமே உள்ள நிலையில் 78 பேர் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதற்கிடையே இறுதி பட்டியலிலும் தங்கள் பெயர் இல்லாததால் தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாஞ்சோலையில் ஓட்டுரிமை வழங்க அதிகாரிகள் மறுப்பது ஏன்?
மாஞ்சோலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருப்பதால் ஏற்கனவே அங்கு இருக்கும் தொழிலாளர்களை கீழே இறக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் தான் எஸ்ஐஆர் பணியின் போது பிஎல்ஓக்கள் மேலே ஆய்வுக்கு சென்றனர். அப்போது 78 வாக்காளர்கள் மட்டுமே நிரந்தரமாக வசித்துள்ளனர். எனவே மீதமுள்ளவர்கள் அனைவரையும் படிவம் 6ல் கீழே உள்ள முகவரியை குறிப்பிடும்படி வலியுறுத்தப்பட்டது. ஏற்கனவே படிவத்தில் மாஞ்சோலை முகவரியை குறிப்பிட்டதால் தான் அவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மாஞ்சோலை முகவரியை விண்ணப்பத்தில் குறிப்பிட்டதால் அவர்களது பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை. கீழே உள்ள முகவரியை கொடுத்தால் மாஞ்சோலையில் மீண்டும் குடியேற விரும்பும் வாய்ப்பு வீணாகி விடுமோ? என்ற அச்சத்தில் மாஞ்சோலை முகவரியை மக்கள் கொடுக்கின்றனர்.
'தற்போது கூட விண்ணப்பிக்க நேரம் இருக்கிறது' - வருவாய் துறை
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''78 பேர் மட்டுமே மேலே நிரந்தரமாக வசிக்கின்றனர். எனவே அவர்களுக்கு அங்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் கீழே ஆங்காங்கே குடியிருந்து வருகின்றனர். அவர்கள் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களில் தற்போது எங்கு வசிக்கிறார்களோ? அந்த முகவரியை மாற்றும்படி கூறியும் கேட்க மறுக்கிறார்கள். அரசை பொறுத்தவரை அந்த 722 பேரும் மேலே வசிக்கவில்லலை. அப்படி இருக்கும் போது மேலே உள்ள முகவரியை கொடுத்தால் எப்படி அங்கு வாக்குரிமை வழங்க முடியும்?
கீழே வசிக்கும் முகவரியை குறிப்பிட்டால் அங்கே அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படும். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் மாஞ்சோலை முகவரியை குறிப்பிடுவதால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. தற்போது கூட நேரம் இருக்கிறது. அவர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது தாலுகா அலுவலகத்தில் நேரில் சென்றோ படிவம் 6 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் இடம் பெறலாம். ஆனால் மாஞ்சோலை முகவரியை தவிர்த்து கீழே இருக்கும் முகவரியை அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்'' என்றார்.
'மாஞ்சோலையில் வாக்களிக்க வாய்ப்பு வேண்டும்' - தொழிலாளர்கள்
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ''நாங்கள் பல தலைமுறைகளாக அங்கே வாழ்ந்து வருகிறோம். எனவே எங்களுக்கு அங்கு தான் ஓட்டுரிமை வேண்டும். வாழ்வாதாரத்திற்காக அவ்வப்போது கீழே வந்து செல்கிறோம். இந்த ஒரு முறை எங்களுக்கு மாஞ்சோலையில் வாக்களிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் செத்து விட்டோம் என்று எழுதிக் கொடுத்து விடுங்கள்'' என வேதனையோடு தெரிவித்தனர்.

