மக்கள் வீதிக்கு வந்து புரட்சி செய்தால்தான் மேகதாது அணையை தடுக்க முடியும் - அன்புமணி ராமதாஸ்
மேகேதாட்டு அணை கட்டப்படுவதை தடுக்க தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி எம்.பி., எம்எல்ஏக்களுடன் பிரதமர், நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Published : July 5, 2026 at 6:18 PM IST
நாகப்பட்டினம்: மக்கள் வீதிக்கு வந்து மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தினால்தான் மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க முடியும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தருமபுரி மாவட்டம், பில்லிகுண்டில் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார். 4 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட நிலையில், காவிரி சங்கமிக்கும் மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தரும்குளத்தில் அவர் தனது பயணத்தை நிறைவு செய்தார்.
தொடர்ந்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "மேகதாட்டு அணை திட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்று கடந்த ஜுன் 19-ஆம் தேதி சென்னையில் அனைத்து விவசாய சங்க தலைவர்கள் கூட்டத்தை கூட்டினேன்.
காவிரி நமது பிறப்புரிமை. காலம்காலமாக அனுபவித்துகொண்டு இருக்கிறோம். திடீரென்று இந்த தண்ணீர் வரவில்லை என்றால் மிகப்பெரிய பிரச்னையை தமிழ்நாடு எதிர்கொள்ளும். காவிரி பிரச்னை, டெல்டா பிரச்னை மட்டும் கிடையாது. 8 கோடி மக்களில் 5.5 கோடி மக்களுக்கு குடிநீர், விவசாயம் தருகிறது காவிரி நீர்.
ஆனால், நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் எதையும் மதிக்காத கர்நாடக அரசு, காவிரியை தடுத்து ஏற்கனவே 4 அணைகளை கட்டிவிட்டது. ஜுன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணை திறந்திருந்தால் குறுவை சாகுபடி நடந்திருக்கும். மேட்டூர் அணையில் 40 டிஎம்சி தண்ணீர் இருப்பதால் குடிநீருக்காக கொஞ்சம் திறந்து விடப்படுகிறது. மேகேதாட்டு அணை கட்டப்பட்டு விட்டால், குடிப்பதற்குகூட தண்ணீர் கிடைக்காது. அதிக பாதிப்பு டெல்டா பகுதிக்குத்தான். டெல்டா விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்ட வேண்டிய சூழல் மீண்டும் வரக்கூடாது.
மேகதாட்டுவில் அணை கட்டுவது பாமக பிரச்சனை இல்லை; தமிழக மக்களின் பிரச்சனை. மற்ற கட்சிகள் குதிரை பேரம், கழுதை பேரம் பேசும் சூழலில் பாமக தமிழர்களை காப்பாற்றும் ஒரு செயலில் ஈடுபட்டுள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டு விட்டால், தமிழகத்தில் சாகுபடி பரப்பு 10 லட்சம் ஏக்கராக குறைந்து, பஞ்சம், பட்டினி தலைதூக்கும். தமிழர் என்ற இனத்தை கொஞ்ம்கொஞ்சமாக அழிக்கின்ற இனப்படுகொலையாக மேகேதாட்டு அணை கட்டுவதை நாங்கள் நினைக்கிறோம்.
மேகேதாட்டு அணைக்கு பூமி பூஜை போட்டால் தடுத்து நிறுத்த முடியாது. அங்கு எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். முதல்வர் சிவக்குமார் வீட்டில் பிரதமர், நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கிறார்கள். இதற்கு முன்பு அணைகட்டும்போது அமைதியாக இருந்துவிட்டோம். தற்போதும் அமைதியாக இருப்பதால் தினமும் வேலை நடக்கிறது.
கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் மாறிமாறி ஆட்சி செய்கிறார்கள். தமிழகத்தில் அவர்களுக்கு வேலை இல்லை. அதனால்தான் மத்திய அரசு கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்படும். கடந்த கால நீதிமன்ற தீர்ப்புகளில் தமிழகம், பாண்டிச்சேரி, கேரளாவின் அனுமதி இன்றி எதுவும் கட்டக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதை எதையும் கர்நாடகா மதிப்பதில்லை. மக்கள் வீதிக்கு வந்து மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தினால்தான் மேகதாது அணையை தடுக்க முடியும். தமிழக முதல்வர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, அனைத்து தலைவர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
அந்தமான் தீவில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை ராகுல்காந்தி எதிர்க்கிறார். அதுபோல், மேகேதாட்டு அணை திட்டத்தையும் அவர் எதிர்க்க வேண்டும். அந்தமானுக்கு ஒரு நீதி, கர்நாடகாவிற்கு ஒரு நீதியா?
டெல்டா மற்றும் தமிழக மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி அழுத்தம் கொடுத்தால்தான் மத்திய, மாநில அரசுகள் மேகேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த முடியும்" என்றார்.

