டெல்லி சென்று வந்த பிறகு ஆளுநர் ஆளே மாறிவிட்டார்; மாணிக்கம் தாகூர் விமர்சனம்
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை மோசடி குறித்து, பிரதமர் மோடி இதுவரை பேசவில்லை. அனைத்து பாஜகவினரும் மௌன விரதத்தில் உள்ளனர் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

Published : July 5, 2026 at 3:45 PM IST
சென்னை: தமிழக ஆளுநர், பாஜகவின் முகவராக செயல்பட்டு வருகிறார். ஆளுநர் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வந்த பிறகு அவருடைய போக்கு மாறியுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
சென்னை இராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "அயோத்தி ராமர் கோவில் நன்கொடை வசூலில் மோசடி நடந்துள்ளது. கோயில்களை வைத்து கொள்ளை அடிக்கலாம் என்ற ஒரு கிளாசிக் மாதிரி மோசடி நடந்துள்ளது. 7 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. பாஜகவினர், ராமருக்கே அல்வா கொடுத்துள்ளனர். இந்த மோசடி குறித்து அந்த கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்கவில்லை. அனைத்து பாஜகவினரும் மௌன விரதத்தில் உள்ளனர்.
| இதையும் படிங்க.. முருகப்பெருமானின் வரலாற்றைத் திரித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - ‘என்டிஆர்- திரிவிக்ரம்’ பட குழுவுக்கு சீமான் எச்சரிக்கை |
தமிழ்நாட்டில் கோயில்கள் ஏன் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் என பாஜக கேட்கிறது. தனியாரிடம் உள்ள கோயில்களைக் கொண்டு தான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இயங்கி வருகிறார்கள்,
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கோயில்கள் இருந்தால், தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் (ஆர்டிஐ) மூலம் தகவல் கேட்கலாம். சட்டமன்றத்தில் அதுகுறித்து கேள்வியும் கேட்கலாம். ஆனால் ராமர் கோயில் தனியாரிடம் உள்ளதால் அதில் ஆர்டிஐ மூலம் தகவல் பெற முடியாது. ராமர் கோயிலில் தினமும் 16 லட்ச ரூபாய் கொள்ளை அடித்துள்ளனர். ராமர் கோயில் விஷயத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.
உயர்கல்வித் துறையில் ஆர்எஸ்எஸ் ஊடுருவ முயற்சி செய்து வருகிறது. உயர்கல்வித் துறை அமைச்சரை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து அவதூறு பேசி வருகிறார்," என்றார்.
மேலும் பேசிய அவர், "தமிழக ஆளுநர் பாஜகவின் முகவராக செயல்படுகிறார். ஆளுநர் அலுவலகத்தின் பெயரை கமலாலயம் என மாற்றி விடலாம். ஆளுநர் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வந்த பிறகு அவருடைய போக்கு மாறி உள்ளது. ஒருவேளை அமித் ஷா சொன்ன வேலையை ஆளுநர் செய்ய தொடங்கி விட்டாரா என தெரியவில்லை. குறிப்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை விட ஒருபடி மேலே சென்றுவிட்டார் ஆளுநர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தை VBG RAM-G என மாற்றினார்கள். இதில் ஏற்கனவே இருந்த மத்திய அரசின் 90 சதவீத பங்கு 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் 10 சதவீத பங்கு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
| இதையும் படிங்க..தமிழ்நாட்டு மக்கள் இப்போது தான் நிம்மதியாக இருக்கின்றனர்; தவெக விழாவில் முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி பேச்சு |
ராகுல் காந்தி பிரதமரானால் திட்டத்தின் பெயர் மீண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்று மாற்றப்படும். முன்பிருந்ததை போன்று மத்திய அரசு 90 சதவீத பங்களிப்புடனும், மாநில அரசின் 10 சதவீத பங்களிப்புடன் திட்டம் தொடரும்.
மத்திய அரசின் பி.எம். ஶ்ரீ திட்டத்தை காங்கிரஸ் கட்சி நிச்சயம் எதிர்க்கும். பாஜகவை நெஞ்சுக்கு நேராக எதிர்க்கக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் தான். பாஜக, ஆர்.எஸ்.எஸ் செய்யும் தவறுகளை காங்கிரஸ் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கும். தொடர்ந்து போராடும்" என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக் கூட்டம் நாளை (ஜூலை 6) நடைபெற உள்ளது. அதில் முக்கிய அறிவிப்புக்கள் வெளியாக உள்ளன என்றும் அவர் கூறினார்.

