ETV Bharat / state

2026 திமுக தேர்தல் அறிக்கை செயலியை வெளியிட்டார் மு.க ஸ்டாலின்

பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் நேரடியாக சந்தித்து கருத்துகளை கேட்க உள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 3, 2026 at 5:40 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, பொதுமக்கள், வணிகர்கள், கல்வியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கருத்து தெரிவிக்கும் வகையில், திமுக தேர்தல் பணிக் குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செயலியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் கனிமொழி உள்ளிட்ட தேர்தல் அறிக்கை தயாரித்துக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இது குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பொருட்டு, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, கோவி. செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, எழிலன், முன்னாள் எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன், அப்துல்லா, கார்த்திகேய சிவசேனாபதி, கான்ஸ்டாண்டைன் ரவீந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜி. சந்தானம், தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம் ஆகிய 12 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழ அமைக்கப்பட்டது.

தேர்தல் அறிக்கை செயலி அறிமுகம்
தேர்தல் அறிக்கை செயலி அறிமுகம் (ETV Bharat Tamil Nadu)

இந்த குழுவினர் பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக சந்தித்து பரிந்துரைகளை பெற தமிழ்நாடு முழுக்க பயணம் செய்ய உள்ளனர்.

இதன் துவக்க நிகழ்வாக அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெறும் வகையிலான அலைபேசி எண், வலைதள விவரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் (portal) ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.

பொதுமக்கள் கீழ்கண்ட தளங்களின் மூலம் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் திமுகவுக்கு வழங்கலாம்.

தொலைபேசி08069446900
வாட்ஸ்ஆப் (WhatsApp)9384001724
மின்னஞ்சல்dmkmanifesto2026@dmk.in
இணையதளம்http://www.dmk.in/ta/manifesto2026
சமூக வலைதளம்dmkmanifesto26
செயற்கை நுண்ணறிவுத் தளம்tnmanifesto.ai

2021 - திமுக தேர்தல் அறிக்கையில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டில் இருக்கின்றன. 40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் இருக்கிறது. மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் இது 80 சதவீதம் ஆகும். மீதமுள்ள 101 வாக்குறுதிகளில் 37 வாக்குறுதிகள் ஒன்றிய பாஜக அரசு ஒத்துழைக்காததால் நிலுவையில் உள்ளன.

இவ்வாறு திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.