ETV Bharat / state

திறந்தவெளி சிறைச்சாலையாக விளங்கிய ’கேரித் தீவு’: தமிழர்களின் அவல வரலாற்றை சுமந்து நிற்கும் மலேசிய தீவு

முந்தைய கணக்கெடுப்பின்படி 5500 தமிழர்கள் கேரித் தீவில் வாழ்ந்ததாக கூறப்படும் நிலையில், இத்தீவுக்குள் நுழைந்துவிட்டால் யாரும் வெளியேற முடியாத நிலை இருந்துள்ளது.

'கேரித் தீவு தமிழரின் வரலாற்றுத் தடம்' நூல் வெளியீடு
'கேரித் தீவு தமிழரின் வரலாற்றுத் தடம்' நூல் வெளியீடு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 24, 2026 at 7:42 PM IST

4 Min Read
Choose ETV Bharat

இரா.சிவக்குமார்

கேரித் தீவில் தேயிலை, கரும்பு, காபி, கொக்கோ, தென்னை, ரப்பர் மற்றும் செம்பனை போன்ற தோட்டங்கள் உருவாக்குவதற்காக தமிழர்கள் சொல்லொணாத துயரத்திற்கு ஆட்பட்டனர் என்பது வரலாற்று உண்மை என ஆய்வாளர் சீ.அருண் கூறியுள்ளார்

மலேசிய நாட்டில் உள்ள கேரித் தீவை கட்டமைப்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் அவல வரலாற்றை கூறும் 'கேரித் தீவு தமிழரின் வரலாற்றுத் தடம்' என்ற நூல் குறித்து இந்த செய்தியில் காணலாம்

கடந்த 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவை மண்ணை கைப்பற்றிய ஆங்கிலேயர், தங்களது காலனி நாடுகளில் தேயிலை உள்ளிட்ட பணத் தோட்டங்களை உருவாக்குவதற்காக தமிழ்நாட்டில் இருந்து கட்டாயமாகவும், ஆசை காட்டியும் தமிழர்களை இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ், தென் ஆப்பிரிக்கா, பிஜூ, ரீயூனியன் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.

'கேரித் தீவு தமிழரின் வரலாற்றுத் தடம்'

அங்கெல்லாம் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து, காடுகளை அழித்து, தோட்டங்களை உருவாக்கி வெள்ளை ஏகாதிபத்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினர். இந்நிலையில் அவர்களுக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்புகள் அற்றுப்போனாலும், சில பண்பாட்டு எச்சங்களோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வரலாற்றுப் பேரவலத்தை இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் அண்மையில், 'கேரித் தீவு தமிழரின் வரலாற்றுத் தடம்' என்ற நூல் வெளியாகியுள்ளது.

மலேசியா நாட்டில் ஆசிரியராக பணிபுரிந்தது மட்டுமின்றி, மலேசிய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஆய்வாளருமான சீ.அருண் மதுரைக்கு வருகை தந்தார். நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் அவர் பேசுகையில், ”மலேசிய நாட்டின் சிலாங்கூர் மாநிலத்திற்கு உட்பட்ட கேரித் தீவு எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வுக்காக தமிழ்நாடு வந்தேன். மலேசியாவில் 886 தீவுகளில், மூன்று தீவுகள் தமிழர்களோடு தொடர்புடையவை. எல்லோரும் அறிந்த பினாங்குத் தீவுடன் பங்கோர் தீவு மற்றும் கேரித்தீவு ஆகியவை தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற தீவுகள் ஆகும். பங்கோர் தீவில் வசிக்கின்ற பெரும்பாலான தமிழர்கள் செம்படவர்களாக அல்லது மீனவர்களாக உள்ளனர்.

’கேரித் தீவு’ என்னும் திறந்தவெளி சிறைச்சாலை

அதே போன்று கேரித் தீவு, சிலாங்கூர் மாநிலத்தின் அருகில் அமைந்துள்ளது. கடந்த 1909ஆம் ஆண்டு இந்தத் தீவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஜான் எட்வர்ட் கேரி என்பவர் முதல் முதலாக இந்த தீவிற்குள் நுழைந்து, சதுப்பு நில காடுகளைக் கொண்டிருந்த இந்த தீவில் தோட்டங்களை உருவாக்க முயன்றார். இதற்கு தென்னிந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை பெரும்பான்மையாக அழைத்து வந்து தீவு முழுவதும் தோட்டங்கள் உருவாக்கினார்.

தொடக்கத்தில் கேரித் தீவில் 16 தோட்டங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. முந்தைய கணக்கெடுப்பின்படி 5500 தமிழர்கள், இந்த தீவில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக அமைந்திருந்த ஒரு தீவாகும். இத்தீவுக்குள் நுழைந்துவிட்டால் யாரும் வெளியேற முடியாது. இந்த தீவுக்குள் அழைத்து வரப்பட்ட முதல் தலைமுறையினர், அங்கேயே உழைத்து பாடுபட்டு மாண்டனர். கல்வி, மற்ற சில தேவைகளுக்காக அத்தீவிலிருந்து வெளியேறியவர்கள் இரண்டாம் தலைமுறையினர் மட்டுமே. தற்போது வாழக்கூடிய மூன்றாம் தலைமுறையினரும் தீவுக்குள் வெளியே வந்து வாழத் தொடங்கியுள்ளனர்.

இங்குள்ள தேயிலை, கரும்பு, காபி, கொக்கோ, தென்னை, ரப்பர் மற்றும் செம்பனை போன்ற தோட்டங்கள் உருவாக்குவதற்காக தமிழர்கள் சொல்லொணாத துயரத்திற்கு ஆட்பட்டனர் என்பது வரலாற்று உண்மை. தமிழர்கள் உயிர் தியாகங்கள் செய்துள்ளனர் என்ற செய்தி மலேசிய தமிழர்களாலும் கூட அறியப்படாததாக உள்ளது. ஆகையால் அவலம் நிறைந்த இந்த வரலாற்று சம்பவங்களை வெளி கொணர்வதற்காகவே 'கேரித் தீவு தமிழரின் வரலாற்று தடம்' நூல் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஐந்தரை ஆண்டுகள் கள ஆய்வு மேற்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நூல் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி சென்னை டிஸ்கவரி பேலஸில் வெளியிடப்பட்டது.

கேரித் தீவை கட்டமைத்த தமிழர்கள்

சிங்கப்பூர் நாட்டின் பரப்பளவை விட 99 விழுக்காடு கூடுதல் நிலப்பரப்பை கொண்டது தான் கேரித் தீவு. கடந்த 1882ல் சிலாங்கூர் ஆளுநராக இருந்த சர் ஃபிரங்க் ஸ்வெட்டன்ஹாம் என்பவரை அணுகி, சிலாங்கூர் சுல்தானிடம் ஒப்புதல் பெற்று கேரித் தீவில் அப்போது வாழ்ந்த மாமேரி என்ற பழங்குடி மக்கள் தலைவரின் ஒத்துழைப்போடு எட்வர்டு வெலண்டைன் ஜான் கேரி என்பவரால் கேரித் தீவு குத்தகைக்கு பெறப்பட்டது.

'கேரித் தீவு தமிழரின் வரலாற்றுத் தடம்' நூல் வெளியீடு குறித்து ஆய்வாளர் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

ரப்பர், காப்பி, தேயிலை என மொத்த பதினாறு தோட்டங்கள் தமிழர்களால் உருவாக்கப்பட்டன. அடர்ந்த காடு, மிகக் கொடிய விலங்குகள், குறிப்பாக பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நிறைந்த அந்த காடுகளை செம்மைப்படுத்திய தமிழர்களின் வரலாறு இன்றைக்கு மறைக்கப்படுகிறது.

கடல் மட்டத்திற்கும் கீழே உள்ள கேரித் தீவைச் சுற்றி கடல் நீர் உள்ளே புகாத வண்ணம் தமிழர்களால் மண் மேடுகள் உருவாக்கப்பட்டன. அப்போது நிறைய தமிழர்கள் உயிரிழந்ததாக வரலாறு கூறுகிறது. ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட ஊதியம் தமிழ் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் அங்கு சென்ற தமிழர்கள் தாங்கள் வாழ்வதற்காக குடிசைகளை கொண்டு குடியிருப்புகளை உருவாக்கிக் கொண்டனர். தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட 16 தோட்டங்களில் 11 தமிழ்ப் பள்ளிகள் இயங்கின. பிறகு காலப்போக்கில் அந்த பள்ளிகளின் எண்ணிக்கை 8,5 என மாறி தற்போது வெறும் மூன்று பள்ளிகள் மட்டுமே உள்ளன” என்றார்.

கேரித்தீவு நூலின் வெளியிட்டாளரான கோயம்புத்தூர் தமிழோசை பதிப்பகத்தின் உரிமையாளர் விஜயகுமார் கூறுகையில், ”கடந்த 30 ஆண்டுகளாக உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் வாழ்வியல் குறித்த வரலாற்று நூல்களை வெளியிட்டு வருகிறேன். அந்த வகையில் மலேசிய எழுத்தாளர் அருண் எழுதிய 'சயாம்-பர்மா மரண ரயில் பாதை' என்ற நூலை கடந்த 2008ஆம் ஆண்டு வெளியீடு செய்தோம். தற்போது கேரித் தீவு நூல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன் தாய்த் தமிழ்நாட்டில் இருந்து, தமிழர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு தோட்டத் தொழில்களுக்காக ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த வகையில் மலேசிய நாட்டோடு இன்றும் தாய்த் தமிழ்நாடு நெருக்கமாக இருக்கும் காரணத்தால், அங்குள்ள தமிழர்கள் அதே உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மலேசியாவில் உள்ள சில தீவுகளில் வாழ்கின்ற தமிழர்கள் பெருநிலத்தில் வாழ்கின்ற தமிழர்களோடு தொடர்பற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதுபோன்ற ஒரு தீவுதான் இந்தக் ’கேரித் தீவு’. தன்னுடைய நீண்ட கால ஆராய்ச்சிக்கு பின்னர் கேரித் தீவு வாழ் தமிழர்களின் வாழ்வியல் சூழலை தற்போது எழுத்தாளர் அருண் வெளிக்கொண்டு வந்துள்ளார். இதனை வெறும் நூலாக கூற முடியாது இது ஒரு வரலாற்று பெட்டகம். அந்த வகையில் இந்த நூல் தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், பிஜி, ரீ யூனியன் ஆகிய தீவு, நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இந்த நூல் ஒரு தூண்டுகோலாக அமையும்.

இதன் வாயிலாக தாங்கள் தற்போது எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள் என்ன? தங்களது பூர்வீகம் எது? தாய்த் தமிழ்நாடு எந்த மாதிரியான உதவிகளை செய்ய வேண்டும் என்பதை எல்லாம் அவர்கள் உணர்ந்து அதனை உரத்து ஒலிக்க முடியும். உலகெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழர்களோடு தொடர்பு கொள்வதற்கு இது போன்ற படைப்பு இலக்கியங்கள் பேருதவியாக அமையும். ஆகையால் இது போன்ற நூல்களை அனைவரும் படிக்க வேண்டும். இதன் மூலம் நமது வரலாற்று சம்பவங்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட வேண்டும்.

இதையும் படிங்க: ''பரிசு, பணப்பட்டுவாடா'' - மதுரையில் 5 தொகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்; ஆட்சியர் பிரவீன் குமார்

அது போன்று, உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் தேவைகளை அறிந்து கல்வி, வேலை வாய்ப்பு, உயர் கல்வி ஆகியவற்றில் அனைத்து விதமான உதவிகளையும் தாய்த் தமிழ்நாடு செய்ய வேண்டும். தமிழர்களால் கடுமையாக உழைத்து செம்மைப்படுத்தப்பட்ட ’கேரித் தீவு’ என்ற அந்த நிலப்பரப்பு தமிழர்களின் பெயரால் தான் அழைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஒரு பிரிட்டிஷாரின் பெயரால் அழைக்கப்படுகிறது. உழைத்து ஒரு மண்ணை வளப்படுத்தியதால் அவ்வாறு கேட்பதற்கு உரிமை உண்டு. மலேசிய அரசிடம் மலேசிய தமிழர்களும், தமிழக தமிழர்களும் இதுகுறித்த கோரிக்கையை வைக்க வேண்டும்” என்றார்.