அஜித்குமார் கொலை வழக்கு; டிஎஸ்பி-யின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - நீதிமன்றத்தின் கேள்வியால் 'டுவிஸ்ட்'
காவல்துறை துணை கண்காணிப்பாளரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என நீதிபதி கேள்வி எழுப்பியதால், முன் ஜாமீன் மனு திரும்ப பெறப்பட்டது.

Published : January 7, 2026 at 10:47 PM IST
மதுரை: திருப்புவனம் அருகே கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்தின் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி நகை திருட்டு வழக்கில் தனிப்படை போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட நிலையில், 28ஆம் தேதி போலீசாரால் கொடூர சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று (ஜன.7) அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா உள்ளிட்ட 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக, காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) சண்முகசுந்தரம் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் முகைதீன் பாட்சா ஆஜராகி, இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. எனவே மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது. அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியது உள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அப்பொழுது நீதிபதி, காவல்துறை துணை கண்காணிப்பாளரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார். இந்நிலையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன் ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து முன் ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதி வழங்கிய நீதிபதி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

