உதகை பழக்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த பேரீச்சம் பழத்தால் ஆன டைனோசர்
தோட்டக்கலைத் துறை மூலம் அரங்கு அமைத்து 160 வகையான பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Published : May 27, 2026 at 6:00 PM IST
நீலகிரி: நீலகிரி கோடைவிழாவின் இறுதி நிகழ்வாக 66 ஆவது பழக்காட்சி சிம்ஸ் பூங்காவில் இன்று தொடங்கி உள்ளது. இதில் பேரீச்சம் பழத்தால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்த டைனோசர்கள் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள சிம்ஸ் பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக 66 ஆவது 'பழக்காட்சி 2026' இன்று (மே 27) நடைபெற்றது. கோடை விழாவின் நிறைவு விழாவான இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டு பழக் கண்காட்சியைக் கண்டு ரசித்தனர்.
நிறைவு விழா
சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாகவும், மகிழ்விக்கும் விதமாக ஆண்டுதோறும் 'கோடை விழா' ஊட்டியில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான கோடை விழா மே 4 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று (மே 27) நிறைவு விழாவான பழக்காட்சி தொடங்கி உள்ளது. தொடந்து நான்கு நாட்கள் இக்கண்காட்சி நடைபெறும் என்று தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு பழக்காட்சியில் பழங்களைப் பயன்படுத்தி பறவைகள், இசைக் கருவிகள் மற்றும் விலங்குகள் ஆகியவை உருவாக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, உலகில் வாழ்ந்து அழிந்த விலங்கினமான டைனோசர் போன்றவை பழங்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
முக்கியமாக, 1 டன் எடை கொண்ட பேரீச்சம் பழங்களை கொண்டு பிரம்மாண்ட டைனோசர் வடிவமைக்கப்பட்டுள்ளது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இத்துடன், டைனோசர் முட்டையில் இருந்து குட்டிகள் வெளிவருவது போல இவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பினரை கவரும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இந்த பழக்காட்சியில் தோட்டக்கலைத் துறை மூலம் அரங்கு அமைத்து 160 வகையான பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

| இதையும் படிங்க: கைவிடப்பட்ட குவாரியை குப்பைக்கிடங்காக மாற்ற திட்டமிடுகிறதா தவெக? 'பூவுலகின் நண்பர்கள' கண்டனம் |
மலர் கண்காட்சி
ஊட்டி கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர் தொட்டிகள் மற்றும் 275 வகையான மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவைதவிர, விழாவின் மற்றொரு பகுதியாக ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, நறுமணப் பொருட்கள் கண்காட்சி மற்றும் மலைப்பயிர்கள் கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டன.
இவற்றை தொடர்ந்து, ஊட்டி கோடை விழாவின் இறுதி விழாவான பழக்கண்காட்சி இன்று தொடங்கி உள்ளது.

