ETV Bharat / state

நான் வேண்டுமா? ஸ்டாலின் சார் வேண்டுமா? தஞ்சையில் விஜய் கேள்வி

எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் மற்றவர்களுக்கு இது தேர்தல். ஆனால் எனக்கும், என்னை நேசிக்கிற மக்களுக்கும் இது 'Emotion' என தவெக தலைவர் விஜய் கூறினார்.

த.வெ.க. தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய் (TVK LIVE)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 4, 2026 at 2:14 PM IST

8 Min Read
Choose ETV Bharat

தஞ்சாவூர்: வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களை நேசிக்கின்ற விஜய் வேண்டுமா? அல்லது மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா? என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார்.

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அந்த கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.

அப்போது அவர், "வேலூர் கூட்டத்தில் நான் பேசிய போது, இது தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தல். இதை ஏன் தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்குமான தேர்தல் என்று கூறுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தேன். உடனே விஜய், பாஜகவுக்காக பேசுகிறார் என்று திரித்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

நமது சிறுபான்மையின சகோதரர்களை பயமுறுத்தி பயமுறுத்தி ஒரு ஏமாற்று வேலை ஒன்று செய்வார்கள் அல்லவா. அது இனிமேல் அவர்களால் தொடர்ந்து செய்ய முடியாது என்பது அவர்களுக்கு தெரிந்து விட்டது. அதனால் தான் நான் என்ன பேசினாலும் அதை திரித்து பேசுவது, அந்த தில்லுமுல்லு வேலைகளையெல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

'Work Out' ஆகாது பாஸ்

சென்னையில் டெல்லி... டெல்லி... என்று கூவுவதும், அடிக்கிற கொள்ளைக்கு ரெய்டு வந்து விட்டால் டெல்லிக்கு வெள்ளைக்குடை பிடிப்பதும் யாரு? என்று உங்களுக்கு நன்றாக தெரியும். தமிழ்நாட்டை காப்பாற்றுவது திமுக தான், தமிழ்நாட்டை வாழ வைப்பது திமுக தான். இதெல்லாம் செய்வது திமுக தான், ஸ்டாலின் சார் தான் என்ற உங்கள் பரப்புரை 'Work Out' ஆகாது பாஸ். சின்ன பசங்க எல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஓம் சக்தி - பரா சக்தி- திமுக ஒரு தீய சக்தி என்று.

கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணியால் தொட்டுக் கூடப் பார்க்க முடியாது. அப்படி இருக்கும் போது கிரிக்கெட்டிலும் விசில் போடுவது CSK தான். வரும் தேர்தலில் விசில் போடப் போவதும் நமது TVK தான்.

தவெக அடித்து நொறுக்கும்

இந்த அணி - அந்த அணி - டெல்லி அணி இவை அனைத்தும் வரும் தேர்தலில் உடைந்து போகும். தவெக அடித்து நொறுக்கும். எனக்கும் என்னுடைய மக்களுக்கும் நடுவில் வேறு யாராலும் உள்ளே நுழையவே முடியாது. இது ஒரு அம்மா-மகன் உறவு. அப்பா- மகன் உறவு, அண்ணன்- தங்கை உறவு, அண்ணன்- தம்பி உறவு, அக்கா- தம்பி உறவு, இது சும்மா தேர்தலுக்காக வந்த உறவு என்று நினைத்து விடாதீர்கள். இது இயற்கையாக அமைந்த உறவு.

எளிமையாக சொல்லவேண்டுமென்றால் மற்றவர்களுக்கு இது தேர்தல். ஆனால் எனக்கும், என்னை நேசிக்கின்ற மக்களுக்கும் இது 'Emotion'. இது சாதாரண 'Emotion' அல்ல. இது 'Oceanic Powerful Emotion'.

நீங்கள் எல்லோரும் எனக்கு ஒரு உறுதிமொழியைக் கொடுக்க வேண்டும். ஊழலற்ற உண்மையான சமூகநீதியை நிலை நாட்ட நமது ஆட்சியை அமைய வாக்களிப்பீர்களா? உங்களிடம் கேட்கிறேன் வாக்களிப்பீர்களா? இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள் தானே? உண்மையிலே கொடுப்பீர்கள் தானே? இந்த விஜயை நம்புவீர்கள் தானே? ஒவ்வொரு வீட்டிலும் விசில் சத்தம் கேட்கும் தானே? அந்த விசில் சத்தம் ஒவ்வொரு பூத்திலும் புயலாக ஒலிக்கும் தானே?

ஒரு மருத்துவர் இருக்கிறார் என்றால் எப்போது அவரை பற்றி யோசிப்போம். நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் யோசிப்போம். நாம் உணவருந்தும் போது நம்மை அறியாமல் ஒருவரை பற்றி நினைப்போம். நம்மை அறியாமல் அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம். அந்த மதிப்பிற்குரிய மனிதர்கள் வேறு யாரும் இல்லை விவசாயிகள். அவர்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல.

இந்த உலகத்தையும், மனிதர்களையும் படைத்தது கடவுள் என்று கூறுவார்கள். ஆனால் அந்த கடவுளுக்கே படையல் போடுகின்ற உயர்ந்த மனிதர்கள் தான் நமது விவசாயிகள். இந்த பூமியில் பூ பூக்கும், காய்கள் காய்க்கும் என அழகாக காட்டி இந்த பூமியை கடவுளாக மாற்றுவதில் இயற்கையோடு சேர்ந்து இந்த விவசாயிகளுக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. நான் ஓவர் ஆக சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்.

விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும்!

மறுபிறவி பற்றி எனக்கு தெரியாது. அது உண்மை என்றால் அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விவசாயத்தைப் பற்றி தெரியாது தான். ஒப்புக் கொள்கிறேன். மற்றவர்கள் மாதிரி நானும் டெல்டாகாரர் தான் என்று உங்கள் காதில் 'டால்டா' ஊற்றுவதற்கு வரவில்லை. விவசாயத்தைப் பற்றி தெரியவில்லை என்றாலும் கூட அவர்களின் கஷ்டத்தைப் பற்றி நன்றாக எனக்கு தெரியும்.

நமது முதல் அரசியல் பயணம் தொடங்கியதே அந்த பரந்தூர் விவகாரத்தை கையில் எடுத்து தான். அதனால் நம்முடைய ஆட்சி அமைந்ததும் தீர்க்க வேண்டிய முக்கிய பிரச்சனைகளில் நமது விவசாய பிரச்சனைகளும் ஒன்று. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.நா. சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த செய்தி நாளிதழ்களில் வந்தது. 'தண்ணீர் திவால்' என்ற தலைப்பில் வெளியான கட்டுரையை படிக்கும் போது மனது மிகவும் வேதனையடைந்தது.

திமுக அரசுக்கு சரமாரி கேள்வி

இந்தியாவிலேயே முக்கியமாக நமது தமிழ்நாடு இன்னும் சில நாட்களில் தண்ணீரே இல்லாமல் திவால் ஆகப் போகிறது. அதுக்கு காரணம் நிலத்தடி நீரை பாதுகாக்காமல் விட்டதே. மண்ணையும், மணலையும் கொள்ளையடித்தால் வேறு என்ன நடக்கும்? மலைகளை விழுங்கினால் என்ன நடக்கும்? கனிம வளங்களை கொள்ளையடித்தல் வேறு என்ன நடக்கும்? மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நீங்கள் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியதை மறந்து விட்டீர்களா? மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை ஆகியவற்றிக்கு காரணம் மணல் மாஃபியா குரூப் தான் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியதே. மறந்து விட்டீர்களா?

இந்த மணல் மாஃபியா குரூப்பிற்கு ஆதரவு அளிப்பது திமுக அரசு தானே? அது இல்லை என்று சொல்ல முடியுமா? அவர்களுடன் கூட்டணியில் இருப்பது யாரு நீங்கள் தானே? இல்லை என்று சொல்ல முடியுமா? தண்ணீர் திவால் ஆக போகுது, கனிம வளம் திவால் ஆக போகுது, மணல் திவால் ஆக போகுது, மொத்தத்தில் உங்கள் ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப் போகுது. கடன் மேல் கடன் வாங்கிக் கொண்டு உங்கள் அரசு தலைகீழாகப் படுத்து விட்டது.

நமது விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த நெல் எல்லாம் மழையில் நனைந்து வீணாகிப் போனதே? டெல்டாக்காரன் என்று கூறிக் கொள்ளும் நீங்கள் அதை கவனித்தீர்களா? அவர்களின் போராட்டத்தில் எதற்காவது உடன் நின்றீர்களா? குண்டாஸில் மட்டும் போடுவீர்கள். இதுதானே உங்கள் சாதனை. பரந்தூர் விவகாரத்தில் உங்களுடைய உண்மையான நிலைப்பாடு என்ன?

தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைப்போம். இந்தியாவிலேயே இது குறித்து நாங்கள் மட்டும் தான் யோசிக்கிறோம் என்று பெருமையாகக் கூறுகிறது திமுக அரசு. இது போன்ற பெரிய திட்டங்களை ஆட்சிக்கு வந்த உடனே செய்ய மாட்டார்கள். ஆட்சி முடியும் தருவாயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவார்கள். அதன் பிறகு தேர்தல் வரும் தோல்வி அடைந்து விடுவார்கள். கேட்டால் எங்கள் அரசு தான் முடிந்து விட்டதே என்று நாடகம் ஆடுவார்கள்.

மக்கள் மீது உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்த உடனேயே இந்த மாதிரியான பெரிய பெரிய திட்டங்களை தொடங்க வேண்டியது தானே? அதென்ன ஆட்சி முடியும் போது அடிக்கல் நாட்டுவது? இதெல்லாம் நம்புவதற்கு மக்கள் ஏமாளிகள் என நினைத்தீர்களா? நமது ஆட்சி அமைந்ததும் இது போன்ற பெரிய திட்டங்களை எல்லாம் உடனே தொடங்கிவிடுவோம். அந்த திட்டங்களை ஐந்து வருடங்களுக்குள் நிறைவு செய்வதற்கு முயற்சி செய்வோம்.

இப்படியெல்லாம் பேசினால் காவிரி பிரச்சினையில் உனது நிலைப்பாடு என்ன? முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உனது கருத்து என்ன? அவற்றை பற்றி உனக்கு தெரியுமா? என கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். தண்ணீருக்குள் சென்று அணைகளின் உறுதித்தன்மையை ஆராய்வது வரைக்கும் நானும் தெரிந்து தான் வைத்திருக்கிறேன். ஒருவர் அமைதியாக இருக்கிறார் என்றால் அவருக்கு எதுவும் தெரியாது என நினைத்துவிட வேண்டாம்.

கருத்து கூறிக் கொண்டு கம்பை சுற்றிக் கொண்டு இருந்தால் எல்லாமே நடந்துவிடுமா? 'நச நச' என்று அதை பேசிப் பேசி மக்கள் வெறுத்துப் போய் விட்டார்கள். உருப்படியாக எதையாவது யோசியுங்கள் என்று மக்கள் நினைக்கிறது யாருக்கு தெரிகிறதோ, இல்லையோ எனக்கு நன்றாகத் தெரிகிறது.

திமுக தொடர்ந்து 2-வது முறை ஆட்சிக்கு வந்தது இல்லை

நமது கடல் விவசாயிகளான மீனவர்களின் பிரச்சினைகளுக்கு அந்த சமயத்தில் எழுந்து கடிதம் எழுதி விட்டு உறங்கச் சென்று விடுவார்கள். அவ்வளவு தான் அது அப்படியே கிடக்கும். 'மானே தேனே பொன் மானே....'. இப்படி கடிதம் எழுதுவதெல்லாம் வேலைக்கு ஆகாது. ஒன்றிய அரசுக்கு உண்மையான உணர்வுப்பூர்வமான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். நமது மீனவர்கள் மீது அவர்கள் கையே வைக்கக் கூடாது. அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டும். அது தான் நமது அஜெண்டா. மீனவர்களே அடுத்தது நமது ஆட்சி தான்.

அடுத்ததும் நாங்கள் தான் என்று முதலமைச்சர் சார் கூறுகிறார். அதெல்லாம் நடக்கவே நடக்காது. திமுக தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த சரித்திரமே கிடையாது. 'Great Wall of China' என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனுடைய நீளத்தை விட மிகப் பெரிய டாஸ்க் இது. ஸ்டாலின் சாரின் தந்தையாலேயே இது முடியவில்லை.

நான் ஏற்கனவே கூறியது போல் உரிய இடத்திற்கு சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி அதற்கான தீர்வு என்ன என்பதை தெரிந்துக் கொண்டு செயல்படுத்துவதே தெளிவான அரசியல். ஆறுதல் கூறுவது தெளிவான அரசியல் இல்லை. மக்களுக்கான உழைப்பு இருக்க வேண்டும், அதற்காக தான் அரசியலுக்கு நாம் வந்துள்ளோம். இது எதிரிகளுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் நம்மை சுற்றி அத்தனை சதிகள்.

அதில் முக்கியமான சதி என்ன தெரியுமா? ஏ இதை பாரு, ஒன்னு நீ இல்லனா நான். நான் இல்லை என்றால் நீ... நீ இல்லை என்றால் நான். நமக்கு இடையே வேறு யாரும் நடுவில் வந்து விடக் கூடாது. இரண்டு பேரால் மட்டும் தான் எளிதாக மக்களை ஏமாற்ற முடியும். இந்த விஜய் வந்ததால் நமக்கு பொழப்பே போய்விடும். மக்கள் வேற அவரை தான் நம்புகிறார்கள். நாம் வெளியில் அடித்துக் கொள்வது போல் இருந்தாலும் உள்ளே டீலிங் பக்காவாக இருக்க வேண்டும். மக்கள் ஃபீலிங் பற்றி நமக்கு கவலையில்லை. நமக்கு டீலிங் தான் முக்கியம் என்று இரு கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.

விஜய்யை முடக்க முயற்சி

அதனால் நீ என்ன செய்கிறாய் SOP போட்டு ஒரு பக்கம் தடுத்து விடு. இன்னொரு பக்கம் அவன் மேல் பழி மேல் பழி போட்டு நானும் தடுத்து விடுகிறேன். என்ன ஓகேவா? என்ன டீலிங் ஓகேவா? இப்படி தான் அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

இப்படி கரூரில் ஆரம்பித்து ஜனநாயகன் திரைப்படம் வரைக்கும் என் மீது பழி போட்டார்கள். ஆனால் ஜனநாயகன் ரிலீஸ் விவகாரத்தில் நிறைய பேர் குரல் கொடுத்தார்கள். முக்கியமாக நமது முதலமைச்சர் கூட பூசி மொழுகி பட்டும் படாமலும் குரல் கொடுத்தார். குரல் கொடுத்த அனைவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சரின் மனநிலை இப்போது எப்படி இருக்குது தெரியுமா? ஏற்கனவே கட்சிக்காரர்கள் தொல்லை தங்க முடியவில்லை. தூங்கவிடமாட்டேன்கிறார்கள். இந்த விஜய்யும் வந்து தூங்கவிடமாட்டேன்கிறார் என நினைக்கிறார். விஜய் தான் கேள்விக் கேட்கிறார் என்று பார்த்தால் மக்களையும் கேள்விக் கேட்க வைக்கிறார். ஆயிரம் ரூபாய் கொடுத்திட்டு இருந்தோம், ஐந்தாயிரம் கொடுத்து ஏமாற்றிவிடலாம் என்று பார்த்தால் அதிலும் கேள்விக் கேட்க வைக்கிறார். விசில் சத்தம் வேற விண்ணை முட்டுகிறது. கூட்டணிக் கட்சிகள் தொல்லை வேற தாங்க முடியவில்லை.

இவர் பிரச்சாரத்தை முடக்கலாம் என்று பார்த்தால் அப்போதும் மக்கள் அவர் பின்னால் தான் இருக்கிறார்கள். என்ன செய்வது? ஏது செய்வது? என்று தெரியாத மனநிலையில் முதலமைச்சர் இருக்கிறார்.

ஆனால் சார் இந்த விஜய்யை நீங்கள் முடக்கிவிடலாம். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஒவ்வொரு விஜய்யையும் உங்களால் முடக்க முடியாது. அவர்கள் எல்லாம் ஏற்கனவே பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார்கள். யாராலும் அவர்களை தடுக்க முடியாது.

உச்சநீதிமன்றம் கேள்வி

ஒரு ஊரில் உங்கள் தந்தைக்கு வெண்கலச் சிலை வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தீர்கள். அதற்கு உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது? மக்களுடைய பணத்தில் யாருக்கு புகழ் பாட நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்க்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஊரார் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டிற்கு ஸ்வீட் செய்யாதீர்கள் என்று அர்த்தம்.

மக்களுடைய வாழ்வாதார பிரச்சனைக்கு ஏதாவது செய்யுங்கள் என்று சொன்னால் நிதி சுமை என்று சொல்கிறீர்கள். சிலை வைப்பதற்கு மட்டும் எங்கிருந்து சார் காசு வருகிறது? மக்களுக்கு சோறு போடுவதற்கு வழி இருந்தால் பாருங்கள் சார். சிலை வைப்பதற்கு பிறகு யோசிக்கலாம்.

கியாஸ் சிலிண்டருக்கு மானியமாக ரூபாய் 100 தருகிறோம் என்றீர்களே என்னவானது? கரும்புக்கு ஆதார விலையாக ரூபாய் 4,000 தருகிறோம் என்றீர்களே என்னவானது? திருமணம் ஆகாத பெண்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை கொடுப்போம் என்று சொன்னீர்களே என்னவானது?

இது எல்லாம் வெறும் சாம்பிள் தான். இதையெல்லாம் விட ஹைலைட் ஒன்று உள்ளது. மாநில அரசால் செய்ய முடியாது என்று தெரிந்தும் நாங்கள் வந்தால் நீட்டை ஒழிப்போம்...ஆஹா...ஆஹா எவ்வளவு பெரிய மோசடி இது. கேட்டால் நாங்கள் தான் முன்மாதிரி ஆட்சி என்று கூறுகிறார்கள்.

மக்களை நேசிக்கின்ற விஜய் வேண்டுமா? அல்லது மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா? இந்த விஜய்யை நம்புகிறீர்களா? அல்லது ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா? (அப்போது தொண்டர்கள் விசில் சப்தம்) இந்த சத்தத்திற்கு அர்த்தம் என்ன தெரியுமா சார்? ஸ்டாலின் தொடரட்டும் என அர்த்தம் கிடையாது. தீயசக்தி திமுக ஆட்சி மறையட்டும். தூய சக்தி தவெக ஆட்சி மலரட்டும்" என பேசினார்.