ETV Bharat / state

‘குமரன் குன்று’ கோயில் இடித்து அகற்றம்: போராட்டத்தில் குதித்த மக்கள் கைது - இந்து முன்னணி தலைவர் காயம்!

இந்து முன்னணியினரும், அப்பகுதி பொதுமக்களும் இணைந்து கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அழுது கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயில் அகற்றப்பட்டதை எதிர்த்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயில் அகற்றப்பட்டதை எதிர்த்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 3:12 PM IST

2 Min Read
Choose ETV Bharat

திருப்பூர்: அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த ‘குமரன் குன்று’ என்ற கோயிலை வருவாய்த் துறையினர் இடித்து அகற்றியதால் போராட்டம் வெடித்தது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த ஈட்டிவிரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபட்டி பகுதியில் 2.8 ஏக்கர் பரப்பளவு அரசு புறம்போக்கு நிலம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை ஆக்கிரமித்து குமரன் குன்று என்ற பெயரில் முருகர், விநாயகர், சிவலிங்கம், நந்தி உள்ளிட்ட சன்னதிகள் கொண்ட செல்வ முத்து குமாரசாமி திருக்கோயில் கட்டப்பட்டுள்ளதாக பிரச்சினை எழுந்தது.

இந்த நிலையில், இந்த கோயிலை அவிநாசி வட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில் வருவாய்த் துறையினர் அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

கோயில் அகற்றபடுவதை அறிந்த இந்து முன்னணியினரும், அந்த பகுதி பொதுமக்களும் இணைந்து கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அழுது கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வளாகத்தை விட்டு அப்புறப்படுத்தினர். அப்போது காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் (ETV Bharat Tamil Nadu)

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. கோயில் இடிக்கப்பட்டதை அறிந்த இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்தனர். அந்த நேரத்தில் காவல் துறையினருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில காவல் துறையினர் கால் இடறி சாலையின் ஓரமிருந்து பள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.

அங்கு நடந்த தள்ளுமுள்ளுவில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியமும் காயமடைந்தார். இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, காவல் துறையினரும், வட்டாட்சியர் சந்திரசேகரும் இணைந்து போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையை அடுத்து காடேஸ்வரா சுப்பிரமணியம் அந்த இடத்திலிருந்து புறப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர்கள் கிஷோர் குமார், செந்தில் குமார் மற்றும் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோயிலில் இருந்து அகற்றப்பட்ட சிலைகள், இந்து சமய அறநிலைத்துறைக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: நகைக்காக மூதாட்டி படுகொலை; மாட்டுக் கொட்டகையில் நடந்த பயங்கரம்

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்து முன்னணி தலைவர் காடஸ்வரா சுப்பிரமணியம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதால் அங்கு பாஜகவினர், இந்து முன்னணி நிர்வாகிகள் திரண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.