ETV Bharat / state

சர்க்கரை விலை அதிகரிப்பு எதிரொலி...டீ, காபி விலை கிடுகிடு உயர்வு

சர்க்கரை விலை அதிகரிப்பால் டீ, காபி விலை உயர்ந்துள்ளதால் டீ, காபி விற்பனை மந்தமாகியுள்ளதால் தமிழக அரசு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டீக்கடை உரிமையாளர்கள் கோரிக்கை

டீ, காபி விலை உயர்வு
டீ, காபி விலை உயர்வு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 7:40 PM IST

2 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: சர்க்கரை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கோவில்பட்டி பகுதியில் டீ, காபி விலையும அதிகரித்து வருகிறது.

கரும்பு உற்பத்தி குறைவு காரணமாகவும், எத்தனால் தயாரிப்பிற்கு அதிக அளவு கரும்பு பொருட்கள் பயன்படுத்தப்படுவதாலும் சர்க்கரை (சீனி) உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்க்கரை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ சர்க்கரை ரூ. 47க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வரவுள்ளன. இதன் காரணமாக சர்க்கரையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பண்டிகை காலத்தை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம், ஸ்வீட் மற்றும் பேக்கரிகள் நடத்தி வருவோரின் லாப வரம்பை கடுமையாக பாதித்துள்ளது. சர்க்கரை விலை உயர்விற்கு ஏற்ப இனிப்பு பலகாரங்களின் விலையை உயர்த்தினால் வாடிக்கையாளர்கள் குறையக் கூடும், உயர்த்தாவிட்டால் நஷ்டம் ஏற்படும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் சிறு மற்றும் குறு வணிகர்கள் தவித்து வருகின்றனர்.

சர்க்கரை விலை உயர்வு காரணமாக அல்வா, பால்கோவா, கடலை மிட்டாய் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலை கணிசமாக உயர்ந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சர்க்கரை விலை உயர்வு காரணமாக டீ, காபி விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஒரு ஏக்கர் ரூ.269 கோடி| மும்பையை ஓரங்கட்டிய ஹைதராபாத்!

இந்த விலை உயர்வு காரணமாக, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டீ, 2 ரூபாய் முதல் 5 ரூபாய் என உயர்ந்து, 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட காபியும் 2 ரூபாய் முதல் 5 ரூபாய் என உயர்ந்து, 17 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நாட்டு சக்கரை மூலம் தயாரிக்கப்படும் டீ, காபி விலைகளும் 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளன.

சர்க்கரை (சீனி) விலை உயர்வு காரணமாக தாங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு வழியின்றி இந்த விலை உயர்வினை உயர்த்தி உள்ளதாகவும், விலை உயர்வு காரணமாக டீ காபி விற்பனை பாதியளவு குறைந்திருப்பதாகவும், எனவே தமிழக அரசு சீனி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டீக்கடை உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விலையேற்றம் குறித்து பொதுமக்களான மகேஷ் கூறும்போது, "சர்க்கர விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் ஒரு கிலோ சர்க்கரை ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.70 வரை விலை உயர்ந்துள்ளது.

இதனால் தேநீர் கடைகளிலும் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீ, தற்போது ரூ.12, 15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், சீனி விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் பலர் உணவு சாப்பிடுவதற்கு பதிலாக குறைந்த செலவில் டீ குடித்து தங்களது பசியை சமாளிக்கும் நிலையும் உள்ளது. எனவே, சீனி விலை உயர்வை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சீனியின் அளவை அதிகரிக்க வேண்டும்.

மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் நலனை பாதுகாக்க வேண்டும்" என்றார்.