டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடித்த ‘ஜாக்பாட்’ - புதிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, சுழற்சி முறையில் 8 மணி நேர பணி, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை, மாதத்திற்கு இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

Published : August 31, 2026 at 1:59 PM IST
சென்னை: நாளை முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.
டாஸ்மாக் துறையில் 6 முக்கிய அறிவிப்புகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், டாஸ்மாக் சில்லறை கடைகளில் 23 ஆண்டுகளாக பணியாற்றும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த துறையில் எவ்வித முறைகேடுகளும் நடக்காதவாறு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக கூறினார்.
அவர் வெளியிட்ட 12 முக்கிய அறிவிப்புகள் கீழ் வருமாறு:-
- டாஸ்மாக் சில்லறை கடைகளில் 23 ஆண்டுகளாக ரூ. 2,000 முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டது. இந்த நிலையை மாற்றி தற்பொழுது பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 1 முதல் டாஸ்மாக் மேற்ப்பார்வையாளர்களுக்கு 33,023 ரூபாயும் விற்பனையாளர்களுக்கு 30,284, உதவி விற்பனையாளர்களுக்கு 28,680 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 486.90 கோடி அரசுக்கு செலவு ஏற்படும்.
- டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூபாய் 20,000 வழங்கப்படும்
- டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுதோரும் 3 சீருடைகள் துணி மற்றும் தையல் செலவிற்காக 6,000 ரூபாய் வழங்கப்படும்.
- டாஸ்மாக் சில்லறை கடைகளில் தூய்மை பணி மற்றும், அடிப்படை வசதிகளை உறுதி செய்ய மாதம்தோறும் மாநகர கடைகளுக்கு ரூபாய் 5,000, நகராட்சி பேரூராட்சி கடைகளுக்கு, 4,000, கிராமப்புற கறைகளுக்கு 3,000, சில்லறை செலவுகளை மேற்கொள்ள வழங்கப்படும்.
- டாஸ்மா்க் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, சுழற்சி முறையில் எட்டு மணி நேர பணி, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை, மாதத்திற்கு இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.
- டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் , பணியாளர்களில் தகுதியுடைய 250 பணியாளர்களை சிறப்பு தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை பெற்று, விடுதலையாகி மனம் திருந்தியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மறுவாழ்வு நிதி ரூ. 50,000/-லிருந்து ரூ. 1,00,000/-ஆக உயர்த்தி ரூ.10 கோடி “மறுவாழ்வு நிதி” வழங்கப்படும்.
- மெத்தனால் கட்டுப்பாடு மற்றும் போலி மதுபானம் /கள்ளச்சாராயத் தயாரிப்புக்காக மெத்தனால் மற்றும் மெத்தனால் சார்ந்த மூலப்பொருட்களை சட்ட விரோதமாக பயன்படுத்துவது மற்றும் திசை திருப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் புதிய மெத்தனால் பயன்பாட்டு கொள்கை உருவாக்கப்படும்.
- உரிமம் ரத்து, ஒப்படைப்பு, மாற்றம் உள்ளிட்ட பணிகளை வெளிப்படையாக மேற்கொள்ள 'e-Kalaal' தளத்தில் புதிய தொகுதிகள் உருவாக்கப்படும். மேலும், FL2, FL3, FL3A, FL3AA உரிமம் புதுப்பித்தல் மற்றும் மதுபான இறக்குமதி, பீர் ஏற்றுமதி அனுமதிக்கான செயலிகள் 'e-Kalaal' தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு முழுமையாக மின்னணுமயமாக்கப்படும். இதற்காக ரூ.1.69 கோடி ஒதுக்கப்படும்.
- கள்ளச்சாராயம் காய்ச்சும் நிகழ்வுகளைத் தடுக்கும் பொருட்டு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு திறம்பட செயல்படுவதற்காக 10 நான்கு சக்கர இயக்கத் திறன் கொண்ட அனைத்து நிலப்பரப்பு வாகனங்கள் (All Terrain Vehicles) மற்றும் 10 உயர் தெளிவுத்திறன் கொண்ட கண்காணிப்பு ட்ரோன்கள் (Surveillance Drones) மற்றும் அத்தியாவசிய செயல்பாட்டுக் கருவிகள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்காக மொத்தம் ரூ.2.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்துவதற்கான நிதி ரூ. 5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
- கள்ளச்சாராயம், போலி / கலப்பட மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து இளைஞர்கள் மற்றும் பொது மக்களுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக ரூ.2 கோடியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
| இதையும் படிங்க: பால் கொள்முதல் விலை உயர்வு முதல் செமிகண்டக்டர் உற்பத்தி பூங்கா வரை - முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்புகள் |
இந்த அறிவிப்பை தொடர்ந்து, “பணியாளர்கள் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால், அரசு மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்கும். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகளில் ஒரு ரூபாயில் இருந்து ஒன்பது ரூபாய் வரை கூடுதல் விலையில் மதுபானங்களை விற்பனை செய்த பணியாளர்களுக்கு வெறும் அபராதங்கள் மட்டுமே விதிக்கப்பட்டது.
ஆனால் தற்போதைய ஆட்சியில், ஒரு ரூபாய் கூடுதலாக கட்டணம் வசூலித்தாலும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களில் அதே தவறு நடந்தால், நிரந்தர பணி நீக்கம் செய்யப்படும்' என அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.

