ETV Bharat / state

சந்திர கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் நடை அடைப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் செய்த பின்னர் இரவு 7.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் நடை அடைப்பு
சந்திர கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் நடை அடைப்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 3, 2026 at 12:46 PM IST

2 Min Read
Choose ETV Bharat

தஞ்சாவூர்: உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை அடைக்கபட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வானில் சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணம் ஆகும். இந்த ஆண்டுக்கான முதல் முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. நிலா சிவப்பு நிறத்தில் ஒளிர்வதுடன் நீல விளிம்புடன் காட்சியளிக்கும். முழு கிரகணத்தின் போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தை கடந்து வளைந்து செல்கிறது. இதனால் நீல ஒளி சிதறுகிறது, சிவப்பு ஒளி மட்டும் நிலவை அடைகிறது; இதனால் நிலவு அடர் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும்; இது பிளட் மூன் எனப்படுகிறது. இன்று நீல விளிம்புடன் சிவப்பு நிலவை பார்க்கலாம், சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம், தெளிவாக காண தொலை நோக்குகளை பயன்படுத்தலாம். டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இறுதி பகுதி மட்டுமே தெரியும்.

பகுதி நேர கிரகணம் மாலை 3:20 மணிக்கு, முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இன்று மாலை 4:45 மணிக்கு தொடங்குகிறது. முழு நிலவாக மாலை 5:10-க்கு காட்சி அளிக்கும். இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் சூரியன் மறைவிற்குப் பிறகு நிலவு உதிக்கும் என்பதால் கிரகணத்தின் கடைசி சில நிமிடங்களை மட்டுமே பார்க்க முடியும். டெல்லியில் நிலவு மாலை 6:22 மணிக்கு உதிக்கும், மும்பையில் நிலவு மாலை 6:40 மணிக்கு உதிக்கும், மாலை 6:47 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது.

இதையும் படிங்க: சின்னம்மை அபாயம்! தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

எனவே டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருப்பவர்கள் 7 முதல் 25 நிமிடங்கள் வரை மட்டுமே இந்த சிவப்பு நிற நிலவே ரசிக்க முடியும். குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கிழக்கு அடிவானத்தை சுற்றி ரத்த நிலவின் சிறந்த காட்சிகளை காண முடியும். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் தொலைநோக்கி மூலம் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூரில் உலகப் பிரசித்தி பெற்ற பெரிய கோயிலில் காலை பூஜைகள் நிறைவடைந்த உடன் இன்று காலை 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. பக்தர்கள் கோயிலில் இருந்து வெளியேறினர். கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் செய்த பின்னர் இரவு 7.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். இதனால் வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலாப் பணிகள் பெரிய கோயிலை பார்க்க முடியாமலும், சுவாமியை தரிசனம் செய்ய முடியாமலும் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.