ETV Bharat / state

இனிமேல் துணை தாசில்தார்களுக்கும் வருவாய் சான்றிதழ்கள் வழங்க அதிகாரம் - தமிழக அரசு புதிய நடவடிக்கை

முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ், கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ், வேளாண் வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட 12 சான்றிதழ்கள் இனி துணை தாசில்தார் நிலையிலேயே வழங்கும் வகையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 3, 2026 at 8:06 AM IST

3 Min Read
Choose ETV Bharat

- By எஸ். உசேன்

சென்னை: பொதுமக்களுக்கு வருவாய் சான்றிதழ்களை விரைவாகவும், வெளிப்படையாகவும் வழங்கும் வகையில் தாசில்தார் அதிகாரத்தை துணை தாசில்தார்களுக்கும் பகிர்ந்து அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், “இதுவரை தாலுகா தாசில்தார்களால் வழங்கப்பட்டு வந்த குறிப்பிட்ட வருவாய் சான்றிதழ்களை இனி சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தார் (Tahsildar–SSS) மற்றும் துணை தாசில்தார் (Deputy Tahsildar) ஆகியோரும் வழங்கும் வகையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தாசில்தார்களின் பணிச்சுமையை குறைத்து, பொதுமக்களின் விண்ணப்பங்கள் தேங்காமல் விரைவாக சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் (TNeGA) இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் 26 வகையான மின்னணு சான்றிதழ் சேவைகளை இ-சேவை மையங்கள் மூலம் வழங்கி வருகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்களுக்காக வருவாய் சான்றிதழ்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், தாசில்தார்களுக்கு விண்ணப்பங்களின் பணிச்சுமை அதிகரித்து, சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இதனை தவிர்க்கும் வகையில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தார்களின் பணிச்சுமை குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வழங்க இருக்கும் சான்றிதழ்கள்

வழக்கமான தாலுகா தாசில்தாரிடம் இருந்து சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தாருக்கு பின்வரும் சான்றிதழ்கள் மற்றும் உரிமம் தொடர்பான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

  1. பட்டியல் சாதி சமூகச் சான்றிதழ்
  2. சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழ்
  3. பிற்படுத்தப்பட்டோர் வகுப்புச் சான்றிதழ்
  4. ஆதரவற்ற விதவைச் சான்றிதழ்.

இந்த சான்றிதழ்களுக்கு மூன்று அடுக்கு சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் நடைமுறை பின்பற்றப்படும். கிராம நிர்வாக அலுவலர் -வருவாய் ஆய்வாளர் -சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தார் என்ற அடிப்படையில் இந்த நடைமுறை அமையும்.

கிராம நிர்வாக அலுவலர் விண்ணப்பத்தை சரிபார்த்து கள ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பார். வருவாய் ஆய்வாளர், விண்ணப்பத்தை ஆய்வு செய்து பரிந்துரை செய்வார். சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தார் இறுதி ஒப்புதல் அளித்து சான்றிதழை வழங்குவார்.

12 வகையான சான்றிதழ்கள் இனி துணை தாசிலாதார் கையில்
12 வகையான சான்றிதழ்கள் இனி துணை தாசிலாதார் கையில் (ETV Bharat Tamil Nadu)

துணை தாசில்தார் வழங்கவுள்ள சான்றிதழ்கள்

வழக்கமான தாசில்தார் வழங்கி வந்த 12 வகையான சான்றிதழ்களை இனி துணை தாசில்தார் நிலையிலேயே வழங்கும் வகையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

  1. முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ்
  2. கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்
  3. வேளாண் வருமானச் சான்றிதழ்
  4. விதவைச் சான்றிதழ்
  5. வேலையின்மைச் சான்றிதழ்
  6. குடும்ப இடம்பெயர்வு சான்றிதழ்
  7. சிறு / குறு விவசாயிகள் சான்றிதழ்
  8. பேரிடர்களால் கல்விச் சான்றுகள் இழந்ததற்கான சான்றிதழ்
  9. திருமணமாகாதவர் சான்றிதழ்
  10. ஆண் குழந்தை இல்லாதவர் சான்றிதழ்
  11. பணக்கடன் வழங்குநர் உரிமம்
  12. வேலைவாய்ப்புக்கான முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ்,

இந்த சான்றிதழ்களை துணை தாசில்தார் அளவில் வழங்குவதன் மூலம், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் காலத்தையும், சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தையும் குறைக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த 12 வகை சான்றிதழ்களுக்கும் கிராம நிர்வாக அலுவலர்-வருவாய் ஆய்வாளர்-துணை தாசில்தார் என்ற மூன்று அடுக்கு சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் நடைமுறை பின்பற்றப்படும்.

தொடரும் மூன்றடுக்கு கள ஆய்வு

முதல் நிலை கள ஆய்வாக கிராம நிர்வாக அலுவலர் விண்ணப்பதாரரின் விவரங்களைச் சரிபார்த்து அறிக்கை சமர்ப்பிப்பார். இரண்டாம் நிலையாக வருவாய் ஆய்வாளர் விண்ணப்பத்தை ஆய்வு செய்து பரிந்துரை செய்வார். துணை தாசில்தார் விண்ணப்பத்தைப் பரிசீலித்து இறுதி ஒப்புதல் அளித்து சான்றிதழை வழங்குவார்.

கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் இல்லாத தாலுகாக்களில், வருவாய் ஆய்வாளர் விண்ணப்பத்தைப் பெற்று, தேவையான சரிபார்ப்பு மற்றும் விசாரணைகளை மேற்கொண்டு துணை தாசில்தாருக்கு பரிந்துரை செய்வார்.

சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் (TNeGA) இணைந்து மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

விண்ணப்பத்தின் நிலையை பொதுமக்கள் தெரிந்து கொள்வது எப்படி?

இதன்படி, பொதுமக்கள் தங்களது விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது, எந்த அதிகாரியிடம் பரிசீலனையில் உள்ளது என்பதைக் கண்காணிக்க முடியும்.

மேலும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது திருப்பி அனுப்பப்பட்டாலோ அதற்கான காரணத்தையும் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மென்பொருள் மாற்றம் செய்யப்பட உள்ளது.

விண்ணப்பத்தின் நிலையை அறியலாம்
விண்ணப்பத்தின் நிலையை அறியலாம் (ETV Bharat Tamil Nadu)

திருப்பி அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் தேவையான திருத்தங்களை எந்த இ-சேவை மையத்திலும் மேற்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம், பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை எளிதாகக் கண்காணித்து, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

இதையும் படிங்க: அபிநந்தன் - வான்வெளியின் நிஜ நாயகன் | 2019-ல் நடந்தது என்ன?

புதிய நடைமுறையின் மூலம் வருவாய் சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாசில்தார்களின் பணிச்சுமை குறைக்கப்படுவதுடன், குறிப்பிட்ட சான்றிதழ்களை துணை தாசில்தார் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தார் ஆகியோர் வழங்குவதால், விண்ணப்பங்கள் விரைவாகப் பரிசீலிக்கப்படும்.

மேலும், மூன்று அடுக்கு சரிபார்ப்பு, ஆன்லைன் விண்ணப்ப நிலை கண்காணிப்பு மற்றும் நிராகரிப்புக்கான காரணத்தைத் தெரிவிக்கும் நடைமுறை ஆகியவற்றின் மூலம் சான்றிதழ் வழங்கும் பணியில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.

கூடுதல் நிதிச்சுமை அரசுக்கு ஏற்படாத வகையில் இந்த புதிய நடைமுறையை செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மேல்முறையீட்டு அதிகாரிகளும் புதிய மூன்று அடுக்கு சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் முறையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், புதிய நடைமுறையை செயல்படுத்துவதற்குத் தேவையான மென்பொருள் மாற்றங்களை TNeGA மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

1. கூட்டுறவு பயிர்க்கடன் பெறுவது எப்படி? தள்ளுபடி நிபந்தனைகள் என்னென்ன?

2. இலவச சிலிண்டர்கள் யாருக்கெல்லாம் கிடைக்கும்? 'அன்னபூரணி சூப்பர் 6' திட்டத்தின் நிபந்தனைகள் என்னென்ன?