ETV Bharat / state

'அன்பானவர்; பண்பானவர்; அடக்கமானவர்...' ஓ. பன்னீர்செல்வத்துக்கு புகழாரம் சூட்டிய மு.க.ஸ்டாலின்

வரும் சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பாஜவுக்கும் இடையேயான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ்t
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 27, 2026 at 1:56 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: முன்னாள் முதலமைச்சரும், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக அறியப்பட்டவருமான ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ள நிலையில், அவரை அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்துள்ளார்.

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணமாக, பல நிகழ்வுகளை நாம் காண்பிக்க முடியும். அதற்கு மற்றொரு சான்று பகிரும் வகையில், இன்று திமுகவில் ஓபிஎஸ் இணைந்திருக்கிறார்.

தனது வாழ்நாள் முழுவதும் திமுகவை ஜென்ம விரோதியாக கருதி வந்த ஜெயலலிதாவின் பாசறையில் இருந்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவால் முதலமைச்சராக கைகாட்டப்பட்டவர். அப்படிப்பட்ட ஒருவர், திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியும் பாஜகவின் துணையுடன் அதிமுகவில் இணைந்து விடலாம் என நம்பியிருந்த ஓபிஎஸ்ஸுக்கு, அடுத்தடுத்து ஏமாற்றங்களே பரிசாக கிடைத்ததால் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். ஓபிஎஸ் இணைந்திருப்பதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தென் மாவட்டங்களில் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

'அன்பானவர் - பண்பானவர்'

இது ஒருபுறம் இருக்க, தன்னை சந்தித்து திமுகவில் இணைந்த ஓபிஎஸ்ஸை, அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வரவேற்கும் வகையில் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் பால்வாடி பிள்ளைகள்! ஒரு நக்சல் கிராமத்தின் தலையெழுத்தையே மாற்றிய ஆசிரியர்

அந்த பதிவில், "முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர், திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர். அவரது வரவு நல்வரவாகட்டும். தமிழ்நாடு வெல்லட்டும்" என மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டி வரவேற்றுள்ளார்.

தளபதிக்கு நன்றி - ஓபிஎஸ்

முன்னதாக, திமுகவில் இணைந்த பிறகு அண்ணா அறிவாலயத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேரறிஞர் அண்ணா தொடங்கிய தாய்க்கழகமான திமுகவில் மகிழ்ச்சியோடு இணைந்துள்ளேன் என்றும், என்னை பாசத்தோடு அரவணைத்த தளபதிக்கு நன்றி எனவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.