கிருஷ்ணா நதிநீர் விவகாரம்: அக்.13-இல் ஆந்திரா செல்கிறார் முதலமைச்சர் விஜய்?
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து கிருஷ்ணா நதிநீர் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது.

Published : October 10, 2026 at 10:58 PM IST
சென்னை: கிருஷ்ணா நதிநீர் பங்கீடு, நதிநீர் இணைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழக முதலமைச்சர் விஜய், வரும் 13-ஆம் தேதி ஆந்திர மாநிலம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் கிருஷ்ணா நதிநீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்காக, 'தெலுங்கு கங்கை' திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீரை இரண்டு தவணைகளாக தமிழகத்துக்கு வழங்குவது தொடர்பாக இரு மாநிலங்களும் ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் 4 டிஎம்சி தண்ணீரும் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
இதன் மூலம் சென்னையின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்ய முடியும். இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின்படி தமிழகத்திற்கு உரிய அளவில் தண்ணீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது.
| இதையும் படிங்க: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே கைது; விமானத்திற்குள் சென்று போலீசார் அதிரடி |
இதற்காக வரும் அக்டோபர் 13-ம் தேதி முதலமைச்சர் விஜய், ஆந்திரா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மட்டுமல்லாமல், துணை முதலமைச்சர் பவன் கல்யாணையும் முதல்வர் விஜய் சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதேபோல, ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் ஆறுகளின் குறுக்கே அணைகளை கட்டுவது தொடர்பாக ஆந்திர அரசு ஆலோசித்து வருவதாக தகவல் கசிந்து வருகின்றன.
ஒருவேளை, அணைகள் கட்டப்பட்டால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு வெகுவாக குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதலமைச்சர் விஜய் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அந்த பயணத்திற்கு கர்நாடகாவில் எழுந்த பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதனைக் கருத்தில்கொண்டு, முதலமைச்சர் விஜய்யின் கர்நாடகா பயணத்தை ஒத்தி வைக்குமாறு அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, தனது கர்நாடகா பயணத்தை முதல்வர் விஜய் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

