ETV Bharat / state

'அனைத்து கொறடாக்களுக்கும் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன்' - பேரவையில் லெப்ட் ரைட் வாங்கி சபாநாயகர்

பலமுறை குரல் கொடுத்தும், கையை உயர்த்தியும் கவனம் கிடைக்காததால், நானே மேஜை மீது ஏறி நின்று கையை உயர்த்திய பிறகுதான் சபாநாயகரின் கவனம் கிடைத்தது" என திமுக கொறடா எ.வ.வேலு நகைச்சுவையாக கூறினார்.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 9:28 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது அனைத்துக் கட்சி கொறடாக்களுக்கும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சற்று ஆவேசமாக சில அறிவுரைகளை கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாதக்காலமாக நடைபெற்று வரும் நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இன்று மாற்றுத்திறனாளிகள், மதுவிலக்கு, சமூகநலன், வேளாண்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.

அப்போது தங்களுடைய கவன ஈர்ப்பு தீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

அவர்களை அமருமாறு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறிய போதிலும், அவர்கள் அமர மறுத்து சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இதனால் ஒருகட்டத்தில் கோபமடைந்த சபாநாயகர், "அரசு கொறடாவாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சி கொறடாவாக இருந்தாலும் சரி, அவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர்கள் பேசும்போது மற்ற உறுப்பினர்கள் எழுந்து வந்து குறுக்கிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: சென்னை மேயர் பிரியா தவெக அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை: பேரவையில் கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா

அதேபோல, கொறடாக்கள் எழுந்து நிற்கும்போது, அக்கட்சியை சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் எழுந்து நிற்கக்கூடாது. ஒரு கட்சி உறுப்பினர் பேசும்போது, மற்றவர்கள் எழுந்து அவைக்கு முன்னால் வந்து கைகளை உயர்த்தி பேசுவதை கொறடாக்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும்.

'அமருங்கள்' என சபாநாயகர் கூறினால் உறுப்பினர்கள் அமர வேண்டும். மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியனை பலமுறை அமருமாறு கூறியும், அவர் அமராதது எனக்கே ஆச்சரியமாக இருந்தது" என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த திமுக கொறடா எ.வேலு, "சபாநாயகர் கூறிய கருத்தை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கையை விட்டு வெளியே வருவது தவறுதான். அதேநேரத்தில், சபாநாயகரின் கவனத்தை ஈர்ப்பதற்காக கையை உயர்த்துவது சரியான நடைமுறைதான்.

நானே பலமுறை குரல் கொடுத்தும், கையை உயர்த்தியும் கவனம் கிடைக்காததால், மேஜை மீது ஏறி நின்று கையை உயர்த்திய பிறகே சபாநாயகரின் கவனம் கிடைத்தது" என நகைச்சுவையாக கூறினார். இதை கேட்டு அவையில் சிறிது நேரம சிரிப்பலை ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, “இத்தனை ஆண்டுகளாக கையை உயர்த்தினால் சபாநாயகரின் கவனம் ஈர்க்கப்படும் என நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால், இன்றுதான் மேஜை மீது ஏறி நின்று சபாநாயகரின் கவனத்தை ஈர்க்கலாம் என்ற அரிய வழிமுறையை எங்கள் கொறடா எ.வ.வேலு எங்களுக்கு காட்டிக் கொடுத்துள்ளார்” என கூறினார்.

தங்கம் தென்னரசு பேச்சால் மீண்டும் அவையில் சிரிப்பலை உண்டானது. சிரித்துக் கொண்டே சபாநாயகரும், "அதுபோல மேஜை மீது ஏறி நிற்கும் தண்டனையை நான் கொடுத்துவிட மாட்டேன்” என நகைச்சுவையாக தெரிவித்தார்.