தமிழ்நாடு அரசின் ஓய்வூதிய திட்டம் பழைய மந்தையில் புதிய கல் - தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்
ஆட்சியை நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்பட வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Published : January 4, 2026 at 4:04 PM IST
திருச்சி: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் 'பழைய மந்தையில் புதிய கல்' என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் புதிய ஓய்வூதிய திட்டமா? பழைய ஓய்வூதிய திட்டமா? என்ற குழப்பம் உள்ளது. ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவர்களை ஏமாற்றாமல் ஒழுங்கான ஓய்வூதியத்தை வழங்கப்பட்டுள்ளதா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், மகாத்மா காந்தி பெயரை மாற்றி அந்த திட்டத்தை பிரதமர் மோடி விரிவுபடுத்தினார். ஆனால், இவர்கள் பெயரை மாற்றி அதனை சுருக்கி ஊழியரிடம் இருந்தே பணத்தை பெற்று மீண்டும் அவர்களுக்கு வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனை பழைய மந்தையில் புதிய கல்லாக எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.
நிதி பற்றாக்குறையில் தமிழகம் தள்ளாடுவதாக தமிழக அரசு கூறுவது குறித்த கேள்விக்கு, “நிதி பற்றாக்குறையில் தமிழகம் தள்ளாடுகிறது. தமிழக அரசு ஒன்பதரை லட்சம் கோடி கடனை மக்கள் மீது சுமத்தியுள்ளனர். போதைப் பொருளை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்பட வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆட்சியை நடத்துவதற்கும் மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக தான் செயல்பட வேண்டும். தூய்மை பணியாளர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களை தொடர்ந்து அடிப்பது எந்த விதத்தில் நியாயம்.
தேர்தல் சமயத்தில் பூத்து வேலை மற்றும் ஓட்டு வேலையில் யார் இருப்பார்களோ அவர்களுக்கு சாதகமாக இருப்பார்கள். ஓட்டிற்கும், பூத்திருக்கும் சாதகமாக இல்லாதவர்களிடம் இவர்கள் சாதகமாக இருக்க மாட்டார்கள். இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது அறிவிப்பது என்ன? கடந்த நான்கரை வருடம் என்ன செய்தீர்கள்? இன்னும் பல அறிவிப்புகள் வரலாம். இந்த ஓய்வூதிய திட்டம் என்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்த அரசாணை இல்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “வைகோ மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்கள் சாராய ஆலையை நோக்கி தான் நடை பயணம் செல்ல வேண்டும். போதை ஒழிப்பு குறித்து வைகோ பாதயாத்திரை அறிவாலயத்தை நோக்கி செல்ல வேண்டும். மேலும், கோயில் அனைத்தும் தனது சொத்து என்ற எண்ணம் சேகர்பாபுவிற்கு உள்ளது. இவர் நினைத்தவுடன் மக்கள் கோயிலுக்கு போக வேண்டும்.
இவர் நினைப்பது போல் அனைவரும் நடக்க வேண்டும். உண்மையிலேயே மதச்சார்பற்ற ஆட்சி நடக்குது என்றால் அடுத்த கும்பாபிஷேகத்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை அழைத்து வரவேண்டும் என சேகர்பாபுவிற்கு நான் சவால் விடுகிறேன். திமுக ஆட்சிதான் மத சார்புடையவர்களாக நடந்து கொள்கிறார்கள். மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரை வைப்பதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை’ என்றார்.
மேலும், தேர்தல் அறிக்கை தயாரிக்க தமிழக மக்களிடம் திமுக கருத்து என்ற கேள்விக்கு, “ஏற்கனவே உள்ள தேர்தல் அறிக்கையில் பாதி நிறைவேற்றவில்லை. மீண்டும் புதிய தேர்தல் அறிக்கை தயாரித்தால் அதையும் நிறைவேற்ற மாட்டார்கள். திமுக தயாரிப்பது ஏமாற்று தேர்தல் அறிக்கை” என்றார்.

