ETV Bharat / state

'என்னது... தாய்க்கழகமா? என்னால் ஜீரணிக்க முடியவில்லை': ஓபிஎஸ்ஸை விமர்சித்த தமிழிசை செளந்தரராஜன்

ஒரு பெண் என்றும் பாராமல் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை எந்த கட்சி மிக மோசமாக நடத்தியதோ, அதே கட்சியில் ஓபிஎஸ் இணைந்திருக்கிறார் என தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 27, 2026 at 4:57 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததை கடுமையாக விமர்சித்த தமிழிசை செளந்தராஜன், தாய்க்கழகம் என அவர் கூறியதை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

பாஜகவைச் சேர்ந்த வேலூர் சையது இப்ராஹிம் எழுதிய 'பாரதம் 2014-க்கு முன்பு இஸ்லாமியர்களின் நிலை' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா, பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த புத்தகத்தை நயினார் நாகேந்திரன் வெளியிட்டு பேசினார்.

அவர் பேசுகையில், "ரமலான் மாதத்தில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டிருப்பதை கூடுதல் சிறப்பாக கருதுகிறேன்.மதம் எதுவாக இருந்தாலும் மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும் என்பது பழமொழி. எல்லா மதமும் அன்பைதான் போதிக்கிறது. சிறுபான்மையினர் வாக்கு வங்கிக்காக திமுக அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகிறது.

அதை முறியடிக்கும் விதமாக வேலூர் இப்ராஹிம் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அவரை யாரும் தவறாக பார்க்க வேண்டாம். பாஜகவுக்காக வேலூர் இப்ராஹிம் பல விஷயங்களை அர்ப்பணித்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி பாஜக என்று திமுக கூறுகிறது. ஆனால், உண்மையில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது பாஜகதான். முத்ரா வங்கி கடன்களை அதிகப்படியாக இஸ்லாமிய பெண்களே வாங்குகிறார்கள். எல்லா மதமும் நமக்கு தேவை. எந்த மததத்தையும் குறைத்து பேசக்கூடாது" என நயினார் நாகேந்திரன் பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, அங்கிருந்த செய்தியாளர்களை பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சந்தித்தார். அப்போது, திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தமிழிசை சௌந்தர்ராஜன், "வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக நிச்சயம் தோல்வியை சந்திக்கும். அது இன்று காலையிலேயே உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஓபிஎஸ் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனாலும், தனது வாயால் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவர் கூறியதையும், திமுகவை தாய்க்கழகம் என்று அவர் பேசியதையும் என்னால் ஜீரணிக்கவே வேறு கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியதன் மூலம், அவர் தாய்மையை கொச்சைப்படுத்திவிட்டதாகவே நான் கருதுகிறேன். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுவதும் எந்த கட்சியை எதிர்த்தாரோ, எந்த கட்சி ஒரு பெண் என்றும் பாராமல் அவரை சட்டமன்றத்தில் மிக மோசமாக நடத்தியதோ, அதே கட்சியில் ஓபிஎஸ் இணைந்திருக்கிறார். இதை தமிழக மக்கள் எப்படி ஏற்பார்கள்?

திமுக எந்த அளவில் தோல்வி பயத்தில் இருக்கிறது என்றால், இவர்களைப் போன்றவர்களை சேர்த்துக்கொண்டு திமுகவிற்கு மிகப்பெரிய பலம் கிடைத்துள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார். இதிலிருந்தே திமுகவின் பரிதாப நிலை நமக்கு தெரியவருகிறது" என தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.